பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

என் சரித்திரம்

அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புஸ்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.

அப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போஜனத்திற்குப் பின் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.

இவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்குத் திருப்தி. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டாம். இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது.