பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

247

செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.

அங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.

அப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான திருப்தி உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விஷயங்கள் அப்போது எனக்கு விளங்கின.

மாயூரப் புராணம் ஆரம்பம்

நாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரஸ்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க திருப்தி உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விஷயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.

பிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த ஸந்தோஷம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.