பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

என் சரித்திரம்


அத்தியாயம்‌—41

‘ஆறுமுக பூபாலர்‌’

றுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்புகாட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர் என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால் அன்புடையவராக இருப்பதைக்கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு.

பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.

நள்ளிரவில் விருந்து

ஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும் விசித்திரமானவை. மாலையில் அவர் அனுஷ்டானம் செய்த பிறகு கந்த புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டுவிட்டதாகவும் பலரிடம் சொல்லி மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.

நான் பாடங் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை நான் அலக்ஷியம் செய்வதாக ஒருவேளை எண்ணிவிடுவாரோ என்று பயந்து என் பாடத்தை உடனே நிறுத்திப் புஸ்தகத்தை மூடிவைப்பேன். அவர் படிக்கும்போது நானும் கவனித்து வருவேன்.