பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

என் சரித்திரம்

‘மாறுமுகச் செம்மல்’

பிள்ளையவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வேறிடம் சென்றார். அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை ஆசிரியருக்குச் சொல்லிக்காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த் தவசிப்பிள்ளையிடம் என் பூஜைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே” என்றும் பிரிக்கலாம். தம்பி அதைக் கேட்டால் கோபித்துக்கொள்வார். இவ்வித தவறான அர்த்தம் தோன்றும்படி செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம் செய்துகொண்டேன்.

அந்தச் செய்யுள்

ஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.

“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார் - கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”

என்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில் சிறிது சந்தோஷத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று சொன்னதில் அதிகமான சந்தோஷம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய முகத்தைக் கவனித்துக்கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.

கண்டத்தினின்று தப்பியது

“இனிமேல் நன்றாகப் பாடங் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை விட்டுவிடும். செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’ செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புஸ்தகக்கட்டையும் மாயூரப்புராணத்தையும்