பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலேடையும் யமகமும்

253

எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப்புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புஸ்தகக்கட்டை முன்னிருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான் அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.

அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிதுநேரம் உதாரணங்களுடன் சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்டஇடத்திலிருந்து பாடங் கேட்க ஆரம்பித்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என் மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்றுவிட்டது. நானும் அதை மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக் கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே அறிவார்!

அத்தியாயம்—42

சிலேடையும் யமகமும்

அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையே கும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுது நானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள் சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன. அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து வந்தனராம்.

சிலேடைப் பாட்டு

மற்றொரு நாள் சிறந்த சுப்பிரமணிய ஸ்தலமாகிய ஸ்வாமிமலைக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசனம் செய்தோம்.