பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

என் சரித்திரம்

முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருவேரகமென்பது அந்த ஸ்தலமென்று சொல்லுவர். ஸ்ரீ சாமிநாதனென்பது அங்கே எழுந்தருளிய முருகக் கடவுளின் திருநாமம். நாங்கள் அங்கே போனபோது ஆறுமுகத்தா பிள்ளையும் வந்திருந்தார்.

சுவாமிதரிசனம் செய்தபிறகு பட்டீச்சுரத்திற்குத் திரும்பினோம்; காவிரிக் கரைக்கு வந்தபோது அங்கே பட்டுச்சாலியர்களிற் சிலர் பட்டுநூலை ஜலத்தில் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று என்னைப் பார்த்து, “இந்த நூலுக்கும் நீருக்கும் சிலேடையாக ஒரு வெண்பாப் பாடும், பார்க்கலாம். பத்து நிமிஷத்தில் சொல்லவேண்டும்” என்றார்.

“இதுவே பெரிய துன்பமாகிவிடும் போலிருக்கிறதே!” என்ற நினைவுதான் எனக்கு முதலில் எழுந்ததே ஒழிய அவர் சொல்லியபடி பாடல்செய்ய முயல்வோம் என்று தோன்றவில்லை. அவர் அன்போடு இன்முகங்காட்டி இன்சொல்லால் என்னிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பின் என் மனத்தில் உத்ஸாகம் உண்டாகியிருக்கும். அதிகாரதோரணையோடு அவர் இட்ட கட்டளைக்குப் பணியவேண்டுமென்ற நினைவில் அந்த உத்ஸாகம் ஏற்பட வழியேது?

ஆறுமுகத்தா பிள்ளை கூறியதைக் கேட்ட என் ஆசிரியர் அப்பொழுது அவர் இயல்பை நினைந்து வருந்தினாரென்றே தோற்றியது. “என்ன தம்பீ, திடீரென்று இவ்வளவு கடினமான விஷயத்தைச் சொல்லிச் சீக்கிரத்தில் பாடச்சொன்னால் முடியுமா? பாட்டென்றால் யோசிக்காமல் யந்திரம்போல் இருந்து செய்வதா?” என்று கூறி விட்டு, ‘சிலேடை அடையும்படி இரண்டு அடிகளை நான் செய்துவிடுகிறேன். மேலே இரண்டு அடிகளை நீர் செய்து பாடலைப் பூர்த்தி செய்யும்” என்று என்னை நோக்கிக் கூறினார். உடனே,

 
“வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையரற் றோயக் குறியினால்”

என்ற இரண்டு அடிகளைச் சென்னார். எனக்கு ஆறுமுகத்தா பிள்ளையின் நினைவு, அவர் என்னைச் செய்யுள்செய்யச் சொன்னது எல்லாம் மறந்துபோயின. சிலேடை அமைய என் ஆசிரியர் அவ்வளவு விரைவில் இரண்டடிகளைக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த இரண்டடிகளை ஆசிரியர் மீண்டும் சொல்லி, “மேலே இரண்டடிகளைப் பூர்த்தி செய்யும்” என்றார். நான் சிறிதுநேரம் யோசித்து அவர் கட்டளையை நிறைவேற்றினேன். பாட்டு முழுவதும் வருமாறு: