பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

என் சரித்திரம்

யும் மறந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும்நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஓர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழைவிரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே!

திருவாவடுதுறையில் தெற்குவீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான் நிழல்போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன் அவரை அழைத்துக்கொண்டு உள்ளே ஆதீனகர்த்தரிடம் சென்றார்கள்.

வரவேற்பு

சுப்பிரமணிய தேசிகருடைய சந்தோஷம் அவர் முகத்திலே வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தார். நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல் தம்பிரான்களுக்கு உத்ஸாகம் உண்டாகும். நமக்கும் சந்தோஷம்” என்று சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார்.

“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.

“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது. நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல விஷயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடைபெற்று நாங்கள் எங்கள் விடுதிக்குச் சென்றோம்.

பாடத்தைப் பற்றிய யோசனை

மறுநாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள். அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக்