பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டிப்பு லாபம்

கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே!” என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப் பார்த்தேன்.

“என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்தபோது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விஷயங்களைப் பேசினார்.

எனது வாட்டம்

தம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்தபொழுது எனக்கு ஒருவகையான மனவருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்துவிட்டார்களே. நான் தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக்கூடாதோ! ஆதீன சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ! பிள்ளையவர்கள் ஜாகையிலே இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா? இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு லாபம் ஒன்றுமில்லையே!” என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முகவாட்டத்தோடு யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

என் ஆவல்

அப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த எண்ணங்களை அவர் உணர்ந்துகொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர் பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர் கருத்தையும் உணர்ந்தவர்போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?” என்று கேட்டார். அக்கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று. யோசனையினின்றும் திடீரென்று விழித்துக்கொண்டேன். என்கிருந்த ஆவல் தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன்.