பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

என் சரித்திரம்

யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம் புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.

“எல்லோருக்கும் லாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு லாபம்” என்று தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல் மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோஷ உச்சியில் நின்றேன்.

“உம்மிடம் புஸ்தகங்கள் இருக்கின்றனவா!” என்று அந்த வள்ளல் கேட்டார்.

அவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக, இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டுவரச்செய்து எனக்கு வழங்கினார்.

“பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா?

பாட ஆரம்பம்

குமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில் ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப் படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை கூறினார்.

இவ்வாறு அந்த நல்லநாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம் சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப் புராணம் நடைபெறும். பிற்பகலில் மற்றவர்களுக்குரிய சீகாளத்திப் புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில் நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.

பாடம் நடந்த முறை

சுப்பிரமணிய தேசிகர்முன் பாடம் நடக்கும்போது இடையிடையே நான் இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப் புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல் நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை