பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

என் சரித்திரம்

பக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான்.

அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார்.

காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.

அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார்.

“இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன்.

இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா?

அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸகஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர். அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாஜலபதியினிடம் அளவற்ற