பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் முன்னோர்கள்

11

பக்தியிருந்தது. அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சர்ம நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், ஸ்ரீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்திலுள்ள ஆண், பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிக்ஷை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமஸ்காரஞ் செய்து அதையே சமைத்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது.

வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூஸ்திதியுடையதாக இருந்தது. அவருக்குப் பின் வந்தவர்களுள் ஸ்ரீநிவாஸையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஸ்திரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணைய ரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார்.

இவ்வூரிலிருந்த எல்லோரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டு வழக்கமென்பது