பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

என் சரித்திரம்

பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார்.

வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாஸதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லோருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.

எங்கள் ஊர் குளத்துப் படித்துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேஷ்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாஸனமில்லாத இந்த வெறும் கல் நம் கொள்பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கைபட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.


அத்தியாயம்—3

என் பாட்டனார்

ன் பாட்டனாராகிய வேங்கடாசலையரென்பவர் வேங்கட நாராயணையருடைய மூத்த குமாரர். அவருக்கு ஐயாக்குட்டி ஐயரென்ற ஒரு தம்பி இருந்தார். வேங்கடாசலையருடைய மனைவி பெயர் செல்லத்தம்மாளென்பது. அந்த அம்மாளே என்னுடைய பாட்டியார்; அவருடைய தகப்பனாராகிய[1] ஓதனவனேசுவரரென்பவர்


  1. ஓதனவனேசுவரரென்பது திருச்சேற்றுத்துறை யென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம்.