பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பாட்டனார்

13

தமிழ்வித்துவான்; தாயார் கனம் கிருஷ்ணைய ரென்னும் சங்கீத வித்துவானுடைய சகோதரி.

இங்ஙனம் சங்கீதமும் தமிழும் கலந்த குடும்பத்திலே பிறந்த என் பாட்டியார் நன்றாகப் பாடுவார். அவருக்குப் பல கீர்த்தனங்கள் பாடம் உண்டு. என் பாட்டனார் கடுமையாக நடத்தினாலும் பொறுமையுடன் அடங்கி நடப்பார். அவர் சாதம் பிசைந்து கையில் போட நான் சிறு பிராயத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.

என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால் அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை அடைத்தார். நிலத்தை வைத்துக்கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால் சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம் வைப்பதால் ஜீவனத்துக்குக் கஷ்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை வைத்துக்கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச் சோறு கால் வயிறு போதும்’ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம்; கடன் நிர்ப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித் துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் ஸம்ஸ்கிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. ஆகையால், ‘ஜீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல் ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக் கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர், ஸ்ரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வ ஸ்தோத்திரங்களை வாய்ப் பாடமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர் கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை.

அவர் உபாத்தியாயராக இருந்த நிலை எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. அவரைத் தாத்தாவாக முதிய நிலையில் பார்த்த ஞாபகந்தான் இருக்கிறது. அவர் ஜீவந்தராக இருக்கும்போதே என் பாட்டியார் காலஞ் சென்றுவிட்டார். அதன் பிறகு எங்கள் பாட்டனாருக்கு வேண்டிய உபசாரங்களை என்னுடைய தாயார் செய்து வந்தார்.