பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைமகள் திருக்கோயில்

301

மல் காரியஸ்தர்களுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெறும். ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தாமே தலையிட்டுத் தம் மனத்தையும் பிறர் மனத்தையும் குழப்பும் இயல்பு சுப்பிரமணிய தேசிகரிடம் இல்லை. ஏதேனும் விசேஷமான காரியமாக இருப்பின் கவனித்து இன்ன இன்னபடி நடக்க வேண்டுமென்று கட்டளை இடுவார். காறுபாறு முதலியோர் அக்கட்டளையைச் சிரமேல் தாங்கி ஒழுங்காக நிறைவேற்றுவார்கள். இம்முறையில் எல்லாம் நடந்து வந்தமையால் மடத்து நிர்வாக விஷயத்தில் கவலையடையாமல் வித்துவான்களுக்கிடையில் சிறந்த ரஸிகராகவும் இரவலர்களுக்கு இடையில் உயர்ந்த தாதாவாகவும் விளங்குவது அவருக்குச் சாத்தியமாயிற்று.

தேசாந்தரிகள்

பதினொரு மணிக்குப் பூஜை செய்துவிட்டுப் பன்னிரண்டு மணிக்குச் சுப்பிரமணிய தேசிகர் அடியார்களோடு பந்தியில் பகற் போஜனம் செய்வார். பிறகு சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அப்பால் மீண்டும் பாடம் சொல்வதும் மாணாக்கர்களோடு பேசுவதும் வித்துவான்களோடு சல்லாபம் செய்வதும் ஆகிய காரியங்களில் ஈடுபட்டிருப்பார். இரவில் இரண்டாங்கால பூஜை நடக்கும் சமயத்தில் சிவாலயத்துக்குச் செல்வார். அவருடன் தம்பிரான்களும் மற்றவர்களுமாக முப்பது, நாற்பது பேர்கள் போவார்கள். தரிசனம்செய்து மடத்திற்குத் திரும்புகையில் ஆலயத்திலுள்ள நந்திக்கருகில் வந்து, “தேசாந்தரிகள் வந்திருக்கிறார்களா?” என்று பார்ப்பார். பிராமணர்கள் வந்திருந்தால் சத்திரத்தில் உணவுகொள்ளச் சொல்வார். அதிகப்படியானவர்கள் வந்திருந்தால் சத்திரத்திலுள்ள கிழவிக்குத் துணைசெய்யச் சில சமையற்காரர்களை அனுப்பச் செய்வார். கோயிற்பிரசாதங்களையும் கொடுக்கச் செய்வது உண்டு. மற்றவர்களுக்கு மடத்திலே உணவளிக்க ஏற்பாடு நடக்கும். அபேக்ஷையுள்ளவர்களுக்கு மடத்திலிருந்து பாலும் பழமும் கொடுப்பதுண்டு.

வடமொழி மாணாக்கர்கள்

திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள திருவாலங்காடு, திருக்கோடிகா முதலிய ஊர்களில் வடமொழியில் வல்ல வித்துவான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் மடத்து வித்துவான்களே. அவர்களுக்கு மடத்திலிருந்து வருஷாசனம் அளித்து வந்தனர். அவ்வித்துவான்களிடத்திலே சாஸ்திரங்களைப் பாடங் கேட்பதற்காகப் பல மாணாக்கர்கள் வருவார்கள். திருநெல்வேலி, மதுரை, சேலம்