பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

என் சரித்திரம்

முதலிய இடங்களிலிருந்து அவ்வாறு படிப்பதற்காக வந்தவர்கள் பலரோடு நான் பழகியிருக்கிறேன். அம்மாணாக்கர்களிற் சிலர் திருவாவடுதுறையிலுள்ள அன்னசத்திரத்திலே உணவுகொண்டு வித்துவான்கள் உள்ள இடத்திற்கு முற்பகலிலும் பிற்பகலிலும் சென்று பாடங் கேட்டு வருவார்கள். சிலர் அவ்விடங்களிலே இருந்து சமையல் செய்து உண்டு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய அரிசி முதலிய பொருள்கள் சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி மடத்திலிருந்து அளிக்கப்பெறும்.

சங்கீதம் பயில்வோர்

மடத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான்களிடமும் நாதசுரக்காரர்களிடமும் சிலர் சங்கீதம் பழகி வந்தனர். அடிக்கடி மடத்திற்குச் சங்கீத வித்துவான்கள் வந்து வினிகை நடத்துவார்கள். அதனால் அம்மாணாக்கர்களுக்கு உண்டாகும் லாபம் அதிகம்.

தமிழ் மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடங் கேட்டு வந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற வகுப்பினர்கள் முதலிய பல வகையினர் இருந்தனர். பிராமணர்கள் அன்னசத்திரத்தில் உண்டு வந்தார்கள். சைவப் பிள்ளைகள் மடத்திற் பந்தியிலே ஆகாரம்செய்து வந்தனர். மற்றவர்களுக்கும் தக்கபடி உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்றிருந்தன.

என்னோடு பிள்ளையவர்களிடம் தமிழ்ப் பாடங் கேட்டு வந்தவர்களில் சிலர் முதிய தம்பிரான்கள்; சிலர் குட்டித் தம்பிரான்கள். அண்ணாசாமி ஐயர், சாத்தனூர்ச் சுப்பிரமணிய ஐயர், கஞ்சனூர்ச் சாமிநாதையர் என்பவர்கள் பிராமண மாணாக்கர்களில் முக்கியமானவர்கள். மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர், விக்கிரமசிங்கபுரம் அனந்த கிருஷ்ண கவிராயர், மதுரைச் சாமிநாதபிள்ளை, முகவூர் அருணாசலக் கவிராயர், சந்திரசேகர முதலியார், பூமிநாத செட்டியார் முதலிய பலர் சைவர்கள். இராமகிருஷ்ண பிள்ளையென்ற ஒருவர் இருந்தார். அவர் வைஷ்ணவ வேளாளர். இப்படிப் பல வகுப்பினரும் பல நிலையினருமாக மாணாக்கர்கள் இருப்பினும் யாவரும் ஒரு குடும்பத்தினரைப் போலவே பழகி வந்தோம். எல்லா மாணாக்கர்களிடத்தும் சுப்பிரமணிய தேசிகருக்கு உள்ள அன்புக்கு இணை வேறு ஒன்றும் இல்லை. மடத்திற் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு குறைவும் வராமற் பாதுகாக்க வேண்டுமென்பது அவரது கட்டளை. அவருக்குக் கோபம் வருவது அரிது. அப்படி