பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்

315

அளிக்கும்படி ஏற்பாடு செய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.

பழமும் பாலும்

ஒருநாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன் அவரவர்கள் உணவுகொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் இருந்தமையால் போஜனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில் படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான் படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து உடனே ஆகாரம்செய்து வரும்படி ஒரு மனுஷ்யருடன் என்னை அனுப்பினார். இரவு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லோரும் படுத்துத் தூங்கிவிட்டனர். போஜனம் கிடைக்கக்கூடிய வேறு சில இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன். அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து அளித்து என்னை உண்ணச் செய்தார்.

மறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து, “நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்” என்றார்.

ஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான் அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே?” என்றேன்.

“வேண்டாம்; இங்கே உமக்கு ஆகார விஷயத்தில் சௌகரியம் போதவில்லை. திருவாவடுதுறையில் ஸந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.

சுருங்கிய தனமும் விரிந்த மனமும்

புறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடைபெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்கு