பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

என் சரித்திரம்

சிறப்புக்களோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர்.

அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்துகொண்டார்கள்.

தஞ்சைவாணன் கோவை

விவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம் பாடங் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச் சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.

தஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்த வேளாளச் செல்வனென்றும் அவன் வாழ்ந்திருந்த தஞ்சை, பாண்டி நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்பதென்றும் சொன்னார்.

தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.

அப்பாத்துரை ஐயர்

இரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதஸ்வாமி கோயில் ஸந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம்செய்து வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள் அவருக்கு