பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

என் சரித்திரம்

கேட்ட அவர் உடனே அதனையே இறுதி அடியாக வைத்து ஒரு செய்யுளைக் கூறினார். நான் எழுதினேன். மேலும் செய்யுட்கள் சொல்லச் சொல்ல எழுதி வரலானேன். சில நாட்களில் கடவுள் வாழ்த்தும் நாட்டுப்படலமும் நிறைவேறின. திருப்பெருந்துறைக்கு முன்பே இருந்த தமிழ்ப்புராணங்கள் இரண்டும் ஸ்தல வரலாறுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு அமைந்தவை. பிள்ளையவர்கள் பாடும் புராணங்களில் நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு முதலிய வருணனைகள் கற்பனைத்திறம் விளங்க அமைந்திருப்பதை அறிந்தவர்கள் அம்முறையில் தங்கள் தங்கள் ஊருக்கும் புராணம் வேண்டும் என்று விரும்புவார்கள். திருப்பெருந்துறைக்குப் புதிய புராணம் பாட வேண்டுமென்ற முயற்சியும் அத்தகைய விருப்பத்தினால் எழுந்ததே.

ஆதலால் பிள்ளையவர்கள் நாட்டுச்சிறப்பை விரிவாகவே அமைத்தார். 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம் முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப்பெற்றன. அடிக்கடி சுப்பிரமணிய தேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியே சென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள் நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.

நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆன பகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார். அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார். செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர் பாராட்டிக்கொண்டே வந்தார். “திருப்பெருந்துறை பெரிய சிவக்ஷேத்திரம். மாணிக்கவாசக சுவாமிகள் அருள்பெற்ற ஸ்தலம். அதற்கு ஏற்றபடி இப்புராணமும் சிறப்பாக இருக்கிறது. சீக்கிரம் இதை நிறைவேற்றி அரங்கேற்றிப் பூர்த்தி செய்யவேண்டும்” என்றார். செட்டியாரும் மிகவும் பாராட்டினார்.

அக்கவிஞர்பிரான் நாள்தோறும் சிலசில பாடல்களைச் செய்து வந்தார். அடிக்கடி யாரேனும் பார்க்க வருவார்கள். அவர்களோடு சம்பாஷணை செய்வதில் பொழுதுபோய்விடுமாதலால் சில நாட்கள் புராண வேலை நடைபெறாது. தமிழ்ப்பாடம் மாத்திரம் தடையின்றி நடந்து வந்தது.

பெரிய புராணப் பாடம்

தம்பிரான்களுடைய வேண்டுகோளின்படி ஆசிரியர் பெரியபுராணப் பாடம் நடத்த ஆரம்பித்தார். அப்போது தியாகராச