பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை வடு

323

உள்ள தூரம் அதிகமாயிற்று. என் உள்ளத்தில், “இந்தத் தூரம் இப்படியே விரிந்து சென்றுவிடுமோ?” என்ற எண்ணம் சிறிது தோன்றியது; அப்போது என் வயிறு பகீரென்றது.

பல்லக்கு, சூரியமூலைக்கு அருகில் உள்ள ஒரு தோப்பு வழியே சென்றபோது என் தந்தையார் எதிரே வந்தனர். நான் இருந்த நிலையைக் கண்ட அவர் திடுக்கிட்டுப் போனார். அவர் வந்த கோலம் ஏதோ ஒரு விசேஷத்தைக் குறிப்பித்தது. கண்ணை நன்றாகத் திறந்து பார்க்க என்னால் முடியவில்லை. “பேசாமல் வீட்டுக்குப் போ; பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று தந்தையார் சொல்லிச் சென்றார்.

அத்தியாயம்—53

அம்மை வடு

நான் பல்லக்கில் சூரியமூலையை அடைந்தபோது பகல் 11 மணி இருக்கும். அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது.

எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்தபோது நான் இடிவிழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல்நாள் என் அருமை மாதாமகரும், சிவபக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும் ஆன கிருஷ்ண சாஸ்திரிகள் சிவசாயுஜ்ய பதவியை அடைந்தனர். அவருடைய இனிய வார்த்தைகளையும் சிவபூஜா விசேஷத்தையும் வேறு எங்கே காண்போமென்று இரங்கினேன்.

குழப்பமான நிலை

இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில் சஞ்சயனத்தை நடத்திவிட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என் தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக்கொண்டார். “நம்முடைய குழந்தை; அவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு? நன்றாய்ப்