பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

என் சரித்திரம்

பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம் கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே கொணர்ந்து வைக்கச் செய்தார்.

பிறகு என் தந்தையாரும் தாயாரும் வந்து என்னைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். வேண்டிய பரிகாரங்களைப் பிறர் செய்ய நான் அவ்வீட்டிலே இருந்து வந்தேன். எனக்குக் கண்டிருப்பது பெரியம்மையின் வகையாகிய பனையேறியம்மையென்று அங்குள்ளோர் சொன்னார்கள். நான் சௌக்கியமாக வந்துசேர்ந்ததை ஆசிரியரிடம் தெரிவிக்கும்படி எனக்குத் துணையாக வந்த ஹரிஹரபுத்திர பிள்ளையிடம் சொல்லி அனுப்பினேன்.

அம்மையின் வேகம்

ஒருநாள் எனக்கு அம்மையின் வேகம் அதிகமாயிற்று. நான் என் நினைவை இழந்தேன். அப்போது எல்லோரும் பயந்துபோயினர். என் தாயாரும் தந்தையாரும் கண்ணீர்விட்டனர்.

எனக்கு நினைவு சிறிது வந்தபோது, “நாம் மிகவும் அபாயமான நிலையில் இருக்கிறோம்” என்ற உணர்வு உண்டாயிற்று. அருகில் கண்ணும் கண்ணீருமாய் இருந்த என் தாயாரை நோக்கி, “நான் பிறந்து உங்களுக்கு ஒன்றும் செய்யாமற் போகிறேனே!” என்று பலஹீனமான குரலில் சொன்னேன். அதைக் கேட்டு அவர் கோவென்று கதறினார். என் தந்தையாரும் துக்கசாகரத்தில் ஆழ்ந்தார். ஒன்றும் அறியாத குழந்தையாகிய என் தம்பி அருகில் இருந்து மருளமருள விழித்தான்.

ஆண்டவன் திருவருளால் அக்கண்டத்தினின்றும் நான் தப்பினேன். அம்மை கடுமையாக இருந்தாலும் அக்கடுமை என் உடம்பில் தழும்பை உண்டாக்கியதோடு நின்றது. என் பாட்டனார் இறந்த துக்கத்தின் நடுவிலே வளர்ந்து வந்து அத்துன்ப நிலையை நினைவுறுத்தும் அடையாளமாக இன்றும் சில அம்மை வடுக்கள் என் உடலில் இருக்கின்றன.

மார்கழி மாதம் முழுவதும் நான் மிக்க துன்பத்தை அடைந்தேன். தைமாதம் பிறந்தது. எனக்குச் சிறிது சௌக்கியம் உண்டாயிற்று; தலைக்கு ஜலம்விட்டார்கள். திருவாவடுதுறையில் அசுவதி நக்ஷத்திரத்திலே குருபூஜை நடைபெற்றது. அன்று இரவு சூரியமூலையில் என் அம்மான் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே பார்த்தபோது திருவாவடுதுறையில் ஆகாசவாணங்கள் தெரிந்தன. முந்தின வருஷத்தில் நான் திருவாவடுதுறையிலே