பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

என் சரித்திரம்

வருகிறது. திருவிடைமருதூரில் வசித்த ராஜபந்துக்களான சில மகாராஷ்டிரர்களிடம் மேலே சொன்ன இருவரும் சென்று, “இந்த ஸ்தலத்தில் ஸ்வாமி வருகையில் வீதியில் உள்ள பெண்கள் காமம்கொண்டு பிதற்றினார்களென்று இவ்வூர் உலாவை இயற்றிய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த வீதியில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். உங்கள் ஜாதி ஸ்திரீகளுக்கு அபவாதம் அல்லவா இது?” என்று சொல்லிக் கலகமூட்டிவிட்டார்களாம். பிள்ளையவர்களுக்கு இதனால் சில அசௌகரியங்களும் நேர்ந்தனவாம்.

ஆனால் அவ்விருவரும் பாடங் கேட்டு வருகையில் குணநிதியாகிய பிள்ளையவர்கள் அவர்களிடம் சிறிதேனும் வெறுப்பைக்காட்டாமல் பிரியமாகவே நடத்தி வந்தார். மற்ற மாணாக்கர்களுக்கோ அவ்விருவரிடத்திலும் வெறுப்பு இருந்தே வந்தது. இச்செய்திகளை நான் கேட்டபோது எனக்கும் அவர்களிடத்தில் கோபம் மூண்டது. நன்னூலில் அடிக்கடி அவர்களைக் கேள்விகேட்டுத் திணற வைப்பேன். அவர்கள் முகம் வாடி இருப்பார்கள். இடையிடையே அவர்கள் முன் செய்த விஷமத்தனமான காரியத்தைக் குறிப்பாகச் சொல்லிக்காட்டுவேன். பிள்ளையவர்களிடத்திலிருந்த மதிப்பும் இளமைமுறுக்குமே அவ்வாறு நான் செய்ததற்குக் காரணம்.

இப்படி அடிக்கடி அவர்கள் எங்களிடம் அகப்பட்டுத் துன்புறுவதைக் கண்ட ஆசிரியர் அவ்வாறு செய்யவேண்டாமென்று குறிப்பாகச் சொல்லுவார். எங்களுக்கிருந்த ஆத்திரம் தீரவேயில்லை. ஆசிரியர் அவ்வாறு சொல்லும் தினத்தில் மாத்திரம் சும்மா இருப்போம். மறுபடியும் கண்டனம் கிளம்பும். எங்கள் ஆசிரியர் இவ்விஷயத்தை ஒருநாள் சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி, “இந்தப் பிள்ளைகளுக்கு அவர்களிடம் கோபம் உண்டு. அடியேனிடம் அவ்விருவரும் தவறாக முன்பு நடந்துகொண்டார்கள். அதைத் தெரிந்து அவர்களைப் படாதபாடு படுத்துகிறார்கள். நான் இந்த விஷயத்தில் ஒருவாறு சம்பந்தமுடையவனாதலால் இவர்களைச் சமாதானம் செய்ய இயலவில்லை. சந்நிதானத்தில் ஒரு வார்த்தை கட்டளையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே தேசிகர் எங்களை மாத்திரம் அழைத்துவரச் செய்து, தக்க நியாயங்களை எடுத்துக்காட்டி, “நம்மிடம் வந்திருக்கும் அவ்விருவர்களிடமும் விரோதம் பாராட்டுவது அழகன்று” என்று சொன்னார். அது முதல் நாங்கள் அவர்கள்பால் இருந்த கோபம் நீங்கி அன்போடு பழகலானோம்.