பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

என் சரித்திரம்

கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக்கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வரவர அதிகமாயிற்று. இதனால் மிக்க கவலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பெருந்தொகையைக் கொடுத்துதவிசெய்து அவருக்கிருந்த மனக்கவலையை நீக்கக்கூடிய உபகாரி ஒருவரும் அப்போது இல்லை. வேறுவகையில் பொருளீட்டவும் வழியில்லை. ஏதேனும் ஒரு நூலை இயற்றி அரங்கேற்றினால் அப்போது நூல்செய்வித்தவர்கள் தக்கபடி பொருளுதவி செய்வதுண்டு. இதைத்தவிர வேறு வருவாய்க்கு மார்க்கம் இல்லை. திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி அரங்கேற்றினால் இரண்டாயிர ரூபாய் வரையிற் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தது. புராணம் ஆரம்ப நிலையிலேதான் இருந்தது. அது முழுவதும் பாடி நிறைவேற்றி அரங்கேற்றி முடிந்த பிறகுதானே பணம் கிடைக்கும்? அதுவரையிற் கடன்காரர்களுக்கு வழி சொல்லவேண்டுமே!

எப்போதும் கடனாளி

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. “திருப்பெருந்துறைப் புராண” அரங்கேற்றத்தின் பின் நமக்கு எப்படியும் பணம் கிடைக்கும். இப்போது மடத்திலுள்ள அதிகாரிகளில் யாரிடமேனும் ஐந்நூறு ரூபாய் வாங்கி அவசரமாக உள்ள கடன்தொல்லையைத் தீர்த்து அப்பால் திருப்பிக் கொடுத்துவிடுவோம்” என்று அவர் எண்ணினார். அவருடைய வாழ்க்கைப் போக்கு இவ்விதமே அமைந்திருந்தது. வீட்டில் செலவு ஒரு வரையறையின்றி நடைபெறும். கடன் வாங்கிக்கொண்டே இருப்பார். எங்கேனும் புராணம் பாடி அரங்கேற்றினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்கும். அதைக்கொண்டு கடனைத் தீர்ப்பார். பிறகு செலவு ஏற்படும்போது கடன் வாங்குவார். மடத்தில் அவருடைய ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய தாராளமான செலவுக்குத்தக்க பொருளுதவி கிடைக்கவில்லை. அவருடைய கனிந்த உள்ளமும் பெருந்தன்மையும் அவரை எப்போதும் கடனாளியாகவே வைத்திருந்தன.

கடனை மறுத்த தம்பிரான்

மடத்தில் முக்கிய நிருவாகியாக இருந்த தம்பிரானிடம் குமாரசாமித் தம்பிரான் மூலம் ஆசிரியர் கடன் கேட்கச்செய்தார். அத்தம்பிரானோ கடன்கொடுப்பதற்கு உடன்படவில்லை.

பிறரைக் கடன்கேட்பதால் உண்டாகும் துன்பத்தை அவர் அப்பொழுது அதிகமாக உணர்ந்தார். “நாம் இம்மடத்தில்