பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

என் சரித்திரம்

பஞ்சரத்தினம்’ என்ற பெயருடன் ஐந்து செய்யுட்களை இயற்றினேன்.

நான் செய்யுட்கள் இயற்றுவதோடு, யாரேனும் வந்தால் சில செய்யுட்களின் பொருளையும் எடுத்துச் சொல்லுவேன். அதைக்கேட்டு அவர்கள் மகிழ்வார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அடையாவிடினும் எனக்கே ஒரு திருப்தி உண்டாகும். நான் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்த அந்த ஒரு மாதத்தில் என் பெற்றோர்களுக்கும் என் அபிவிருத்தியிற் கவலைகொண்ட மற்றவர்களுக்கும், “குற்றமில்லை, இவன் முன்னுக்கு வந்து விடுவான்” என்ற அபிப்பிராயம் உண்டாயிற்று.

கர்வபங்கம்

எங்கள் பந்துவும் தமிழிலும் சங்கீதத்திலும் நல்ல பயிற்சி பெற்றவரும் ஆகிய சேஷுவையரென்னும் முதியவர் உத்தமதானபுரத்தில் இருந்தார். தமிழ் வித்துவானாக உள்ளவர்களிடம் தமிழ் படிப்பவர் யாரேனும் சென்றால் அவரைப் பரீக்ஷைசெய்வது அக்காலத்து வழக்கம். மாணாக்கர்கள் அவ்வாறு பரீக்ஷிப்பவர்களிடம் கோபம்கொள்வதில்லை. நான் சேஷுவையரிடம் சென்று பேசியபோது அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். “நாம் பெரிய வித்துவானிடம் படிக்கிறோம். செய்யுள் செய்யும் பழக்கமும் நமக்கு உண்டாகிவிட்டது” என்ற நினைவிலே மிதந்திருந்த நான் அவர் கேட்ட கேள்விகளுக்கு அலக்ஷியமாகப் பதில் சொன்னேன்.

அவர் கம்பராமாயணத்திலே நல்ல பழக்கமுடையவர். அதிலிருந்து ஒரு செய்யுளை எடுத்துக்கூறி, “இதற்கு அர்த்தம் தெரிந்தால், சொல்லு, பார்க்கலாம்” என்றார். நான், “இன்னும் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்கவில்லை” என்று அவரிடம் சொல்லியிருக்கலாம். “பார்க்கலாமே; நம் அறிவிற்கு எட்டாமலா போகப்போகிறது?” என்ற எண்ணத்தால் அச்செய்யுளைக் கவனித்துப் பார்த்தேன்.

யுத்த காண்டத்தில் வருணனை வழிவேண்டு படலத்தில் வருகிறது அப்பாட்டு. வருணன் வாராமை கண்டு கோபித்த இராமபிரான் கடலில் அம்பு எய்யவும், வருணன் நடுங்கிப் பலவகையாக அப்பெருமானைத் துதித்துக்கொண்டே வந்து பணிகின்றான்.

“பாயிருள் சீக்குந் தெய்வப் பருதியைப் பழிக்கு மாலை
ஆயிரங் கரத்தான் மண்மே லடியுறை யாக வைத்துத்
தீயன சிறியோர் செய்தாற் பொறுப்பது பெரியோர் செய்கை
ஆயிர நாமத் தையா சரணமென் றடியில் வீழ்ந்தான்.“