பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

என் சரித்திரம்

பிச்சுவையரென்பவர் வேம்பத்தூர்ச் சோழியர்; ஆசு கவி. எந்தச் சமயத்திலும் எந்த விஷயத்தைப் பற்றியும் கேட்போர் பிரமிக்கும்படி செய்யுள் இயற்றும் ஆற்றலுடையவர். திருப்பெருந்துறையில் அவரை நான் முதலிற் பார்த்தபோதே விரைவாக அவர் செய்யுள் இயற்றுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

சிங்கவனம் சுப்பு பாரதியாரென்பவர் பரம்பரையாகத் தமிழ் வித்துவான்களாக இருந்த பிராமண குடும்பத்தில் உதித்தவர். பிள்ளையவர்களிடம் பல வருஷங்கள் பாடம் கேட்டவர். இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையுள்ளவர். ஒரு பாடலை இசையுடன் எடுத்துச்சொல்லிக் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி பிரசங்கம் செய்யவல்லவர். அவருடைய பேச்சிலிருந்தே திறமையை, அவருடைய சாமர்த்தியத்தை நான் அறிந்துகொண்டேன். அவர் பாடல் சொல்லும்முறை என் மனத்தைக் கவர்ந்தது.

மணல்மேற்குடி கிருஷ்ணையரென்பவர் சிறந்த தமிழ் வித்துவான். செய்யுள் செய்வதிலும் பல நூல் ஆராய்ச்சியிலும் நல்ல ஆற்றலுடையவர். பல பிரபந்தங்கள் செய்தவர்.

பிச்சுவையரும் சுப்பு பாரதியாரும் தாம் இயற்றிய சில பிரபந்தங்களை ஆசிரியரிடம் படித்துக்காட்டி அவர் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு சிறப்புப் பாயிரமும் பெற்றார்கள்.

ஆருத்திரா தரிசனம்

திருவாதிரையன்று குருமூர்த்தியின் தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சுப்பிரமணியத் தம்பிரானுடைய நிர்வாகத் திறமையை அன்று கண்டு வியந்தோம். ‘திருவாவடுதுறை ஆதீனத்தால் அந்த ஸ்தலத்துக்கு மதிப்போ, அன்றி அந்த ஸ்தலத்தால் ஆதீனத்துக்கு மதிப்போ’ என்று சந்தேகம் ஏற்படும்படியான அமைப்புக்கள் அங்கே காணப்பட்டன. அங்கே அக்காலத்திற் சென்றவர்கள் சில தினங்களேனும் தங்கித் தரிசனம்செய்துதான் செல்வார்கள். அவ்வாறு தரிசனத்தின்பொருட்டு வேற்றூர்களிலிருந்து வருவோர்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் அத்தலத்தில் அமைந்திருந்தன.

திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம் ஆரம்பித்தற்கு நல்லநாள் ஒன்று பார்த்து வைக்கப்பெற்றது. இடையே ஆசிரியர் அப்புராணத்தின் பகுதிகளை இயற்றி வந்தார். நான் அவற்றை எழுதும் பணியைச் செய்துவந்தேன்.