பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறை

353

‘சிவகுருநாத பிள்ளை’

எங்களுடன் இருந்த சவேரிநாத பிள்ளை கிறிஸ்தவராக இருந்தாலும் விபூதி அணிந்துகொள்வார். திருப்பெருந்துறையில் யாவரும் அவரைக் கிறிஸ்தவரென்று அறிந்துகொள்ளவில்லை. சிவபக்தர்கள் கூடியிருந்த அவ்விடத்தில் அவரும் ஒரு சிவபக்தராகவே விளங்கினார். சைவர்களோடு பந்தி போஜனம் செய்வதில்லை; தோற்றம், பேச்சு, நடை, உடை, பாவனைகள் எல்லா விஷயங்களிலும் அவருக்கும் சைவர்களுக்கும் வேறுபாடே தோற்றாது. ஆயினும் ‘சவேரிநாதர்’ என்ற பெயர் மாத்திரம் அவர் கிறிஸ்தவரென்பவதைப் புலப்படுத்தியது. பெயரிலும் சைவராக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

திருப்பெருந்துறைக்குச் சென்ற சில தினங்களுக்குப் பிறகு தம் விருப்பத்தை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துக் கொள்ளலானார். “இங்கே எல்லாம் சைவமயமாக இருக்கின்றன நானும் மற்றவர்களைப் போலவே இருந்து வருகிறேன். என் பெயர்தான் என்னை வெளிப்படுத்திவிடுகிறது. அதை மாற்றிச் சைவப் பெயராக வைத்துக்கொள்ளலாமென்று எண்ணுகிறேன். புராணம் அரங்கேற்றும்பொழுது ஐயா அவர்கள் எதையேனும் கவனிப்பதற்காக என்னை அழைக்க நேரும். சிவநேசச் செல்வர்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் கிறிஸ்தவப் பெயரால் என்னை ஐயா அழைக்கும்போது கூட்டத்தினர் ஏதேனும் நினைக்கக்கூடும்” என்றார். “உண்மைதான்” என்று சொல்லிய ஆசிரியர், “இனிமேல் சிவகுருநாத பிள்ளையென்ற பெயரால் உன்னை அழைக்கலாமென்று தோன்றுகிறது. உன் பழையபெயரைப் போலவே அது தொனிக்கிறது” என்று நாம கரணம் செய்தார். சவேரிநாத பிள்ளைக்கு உண்டான சந்தோஷம் இன்னவாறு இருந்ததென்று சொல்ல இயலாது.

சவேரிநாதபிள்ளை குதித்துக்கொண்டே என்னிடம் ஓடி வந்தார். “இங்கே பாருங்கள்; இன்று முதல் நான் முழுச்சைவன். என் பழைய பெயரை மறந்துவிடுங்கள். நான் இப்போது சிவகுருநாதன். உங்களுடைய வைஷ்ணவப் பெயரை மாற்றிச் சாமிநாதனென்று ஐயா வைத்தார்களல்லவா? அந்தப் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. என் கிறிஸ்தவப் பெயரை மாற்றிச் சிவகுருநாதனென்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் நம் இருவரையும் ஒரே நிலையில்வைத்து அன்பு பாராட்டுவதற்கு அடையாளம் இது. இரண்டு பேர்களுக்கும் அர்த்தம் ஒன்றுதானே? சாமிநாதனென்றாலென்ன? சிவகுருநாதனென்றாலென்ன? இரண்டும் ஒன்றே” என்றார்.

ஆசிரியர் செய்த காரியத்தால் உண்டான வியப்போடு அவர் பேச்சால் விளைந்த இன்பமும் சேர்ந்து என் உள்ளத்தைக் கவர்ந்தது.

என்-28