பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பாட்டனார்

17

என் பாட்டனார் மிகுந்த அசௌக்கியமாக இருந்த போது, ஒரு வைதிகர் வந்து, “உமக்குத்தான் வயசாகி விட்டதே; ஆபத்சந்நியாஸம் வாங்கிக் கொள்ளுமே” என்றார். அதைக் கேட்டபொழுது என் பாட்டனார் சந்நியாஸ ஆச்சிரமத்தின் பெருமையையோ, அவ்வாச்சிரமத்திற்குரிய ஒழுக்கங்களையோ எண்ணவில்லை. முன்பு சந்நியாஸம் வாங்கிக் கொண்டவர்களுடைய சமாதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, “ஐயையோ! வேண்டவே வேண்டாம். நான் சந்நியாஸம் வாங்கிக் கொண்டால், சேஷியும் குப்பிச்சியும் என் தலையில் சாணி துகைத்துத் தட்டுவார்கள்! அந்தப் பதவி எனக்கு வேண்டாம்!” என்று கூறினார்.

அந்த காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுரு பிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்திருத்தார். அவருக்கும் என்னுடைய தந்தையாருக்கும் பழக்கம் உண்டு. அதனால் அவர் எங்கள் வீட்டில் தங்கி ஆகாரம் செய்தார். செய்த பிறகு என் தந்தையார் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். பிறகு பாட்டனாரிடம், “இவர் தாசில்தார்; ஏதாவது நம் குடும்பத்துக்குச் சகாயம் செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொண்டால் உபகாரம் செய்யக்கூடியவர். கொஞ்ச நாழிகை பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி மரியாதையை உத்தேசித்து வெளியிலே இருந்தார்.

பாட்டனார் தாசில்தாரிடம் போய் க்ஷேமசமாசாரங்களை விசாரித்தார். தாசில்தாரும் என் பாட்டனாரைப் பதிலுக்கு க்ஷேமம் விசாரித்தார். அப்போது சாதாரணமாக, “சௌக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்று அவர் சொல்லவில்லை. “ஒன்றும் சுகமில்லை. உடம்பே சரிப்படுவதில்லை. வாய்க்கு ஒன்றும் வேண்டியிருக்கவுமில்லை. வயிற்றுவலி இருக்கிறது. ஆகாரம் ஜீரணமாகவில்லை” என்று வரிசையாகத் தம்முடைய சொந்தக் குறைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். குடும்பத்துச் சமாசாரத்தையே அவர் மறந்து போனார். சிவகுரு பிள்ளை அவர் கூறிய விஷயங்களை அரையுங்குறையுமாகக் காதில் போட்டுக்கொண்டு போய்விட்டார்.

“அவரிடம் குடும்பத்துக்கு அநுகூலம் செய்ய வேண்டுமென்று கேட்கவில்லையே!” என்று என் தந்தையார் பாட்டனாரைக் கேட்டார்.

மறந்து போய்விட்டேன். மற்றொரு சமயம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் விடை கூறினார். மற்றொரு சமயம் வரவேயில்லை. என் பாட்டியார் இறந்து இரண்டு வருஷங்களுக்குப் பிறகு என் பாட்டனாரும் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

என்.—2