பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

என் சரித்திரம்

அவர் மரணாவஸ்தையில இருந்தபோது வீட்டிலுள்ளவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவரவர்களுக்கு ஏற்ற வண்ணம் புத்தி சொல்லிக்கொண்டு வந்தார். என் தாயாரை அழைத்து, “நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய். நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன். வருத்தப்படாதே. நீ நல்ல பெண்” என்று சொல்லிவிட்டுத் தம் தலைமாட்டிலுள்ள சிறுமூட்டையை எடுத்தார். அதில் ஒரு முடிச்சை மெல்ல அவிழ்த்தார். “இவைகளை நான் நெடுநாளாக வைத்திருக்கிறேன். எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. இந்தா, என்னுடைய ஞாபகமாக இவைகளை வைத்துக் கொள். உனக்கு வேறு என்ன தரப்போகிறேன்! நீ க்ஷேமமாயிருப்பாய்” என்று இரண்டு பழைய ஊசிகளை எடுத்துக்கொடுத்தார். என் தாயார் அவற்றை பக்தியோடு வாங்கிக் கொண்டார். என் பாட்டனார் அடிக்கடி தம்முடைய வஸ்திரத்தை அந்த ஊசிகளைக் கொண்டு தைத்துக் கொள்வார். என் தாயார் அவற்றைப் பல வருஷங்கள் வரையில் பாதுகாத்து வந்ததுண்டு.

அவருடைய முதுமைப் பருவத்தின் நிகழ்ச்சிகளைத்தான் நான் ஞாபகத்தில் வைக்க முடிந்ததென்றாலும் அவைகளைக் கொண்டே அவருடைய இயல்பை அறிந்துகொள்ள முடியாது. முதுமைப் பருவத்தில் சில இயல்புகள் எல்லோருக்குமே உண்டாவது வழக்கம்.

அவர் முயற்சியுள்ளவர். ஜீவனாதாரமாக இருந்த நிலத்தைப் போக்கியம் வைத்துக் கடனைத் தீர்த்தது அவருடைய தைரியத்தையும் மானத்தையும் வெளிப்படுத்தியது. அவர் பிறகு ஜீவனத்தின் பொருட்டுப் பள்ளிக்கூடம் வைத்து உபாத்தியாயராக இருந்து கௌரவமாக வாழ்ந்து வந்தார். இந்த விஷயங்கள் அவருக்குப் பெருமையைத் தருவதற்குரியனவாகும்.


அத்தியாயம்—4

4. சில பெரியோர்கள்

ஐயாக்குட்டி ஐயர்

ன் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் முதலில் நன்றாக வேதாத்தியயனம் செய்தார்; பிறகு வடமொழியில் காவிய நாடகங்களைக் கற்றார்; இராமாயணம், பாரதம், பாகவதம், ஹாலாஸ்ய மாஹாத்மியம் முதலியவற்றைப் படித்து உபந்நியாசம் செய்யும் திறமை அவர்பால் இருந்தது; வைத்தியம், ஜோஸ்யம், மந்திரம், யோகம் இவற்றிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு;