பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில பெரியோர்கள்

19

சங்கீதமும் வரும்; மலையாளத்தில் இருந்த ஒரு பெரியாரிடம் மந்திர உபதேசம் செய்துகொண்டார்.

ஒருவர் பின் ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்துகொண்டார். மூவரும் காலம் சென்றனர். அவருக்குக் குழந்தையொன்றும் பிறக்கவில்லை. குடும்பத்துக்குரிய நிலம் கடன் தொல்லையினால் போக்கியம் வைக்கப்பட்ட பிறகு அவர் உத்தமதானபுரத்தில் ஒருவித முயற்சியுமின்றி இருப்பதை விரும்பவில்லை. தம்முடைய தமையனார் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்த ஆரம்பித்ததை அறிந்தும் அந்தக் கிராமத்திலே அடைப்பட்டுக் கிடப்பது அவருடைய இயல்புக்கு விரோதமாக இருந்து வந்தது. புராணப் பிரசங்கம் செய்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இந்நாட்டில் நல்ல மதிப்பு உண்டு. ஆதலின் எங்கே போனாலும் தமக்கு ஜீவனத்திற்குக் குறைவில்லை என்பதை ஐயாக்குட்டி ஐயர் உணர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

அவரோ ஏகாங்கி; அதிக ஆசையற்றவர்; ஜனங்களுடைய மனத்தைக் கவர்வதற்கு வேண்டிய இயல்புகள் அவரிடம் நிரம்பியிருந்தன. அவருடைய பூஜை மிகவும் சிறப்பாக இருக்கும். ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜையையும் அவர் செய்து வந்தார். அவர் பூஜை செய்த விக்கிரகம் இப்பொழுது உத்தமதானபுரம் சிவாலயத்தில் வைக்கப்பெற்று ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்ற இடங்களிலெல்லாம் அவருக்குச் சிறப்பு உண்டாயிற்று. தெய்வ பக்தியும் ஜோஸ்யம், மந்திரம் முதலியவைகளில் மிகவும் உறுதியான நம்பிக்கையும் கிராமத்தில் உள்ளவர்களிடம் இருந்தன. ஆதலின் ஐயாக்குட்டி ஐயரை ஒரு பெரிய யோகியென்றும் ஞானியென்றும், ஆசாரியரென்றும் பலர் போற்றிப் பாராட்டி வந்தனர். அவர் மணி மந்திர ஒளஷதங்களின் மூலமாகப் பலருக்கு உபகாரம் செய்து வந்தார்.

அவரை நான் நன்றாகக் கவனித்திருக்கிறேன். இடையிடையே சில காலங்களில் அவர் உத்தமதானபுரம் வந்து சில நாட்கள் தங்குவார். அக்காலங்களிலெல்லாம் அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டேயிருப்பார்கள். ஒருவருக்கு ஜோஸ்யம் சொல்வார்; மற்றொருவருக்கு மந்திரிப்பார்: வேறொருவருக்கு மருந்துச் சரக்குகளைச் சொல்வார். இரவில் புராணப் பிரசங்கம் செய்வார். பெரும்பாலும் தாமே சமையல் செய்துகொண்டு உண்பார்; அயலிடங்களில் உண்பதில்லை.

உத்தமதானபுரத்தில் குளத்தின் மேல்கரையில் இப்பொழுது பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு