பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

என் சரித்திரம்

அதில் அவர் யோகாப்பியாசம் செய்து வந்தார். தினந்தோறும் காலையில் யோகப் பட்டையைத் தரித்து யோக தண்டத்தையும் ஊன்றிக்கொண்டு யோகம் செய்ய உட்கார்ந்து விடுவார். மணிக்கணக்காக அந்நிலையிலேயே அமர்ந்திருப்பார். மத்தியானத்தில் பூஜை செய்யும்போது யாராக இருந்தாலும் அவரது தோற்றத்தைக் கண்டு ஈடுபடாமல் இருக்க முடியாது.

வானவெளியில் உத்ஸாகமாகப் பறந்து செல்லும் பறவையைப்போல் அவர் வாழ்ந்து வந்தார். மனைவியில்லை, பிள்ளை இல்லை என்ற கவலை சிறிதளவும் அவருக்கு உண்டாகவில்லை. அவர் ஒரு யோகி என்பதை அந்த நிலை காட்டியது. எழுபது பிராயத்துக்குமேல் அவர் வாழ்ந்திருந்தார். இறக்கும் வரையில் அவர் தலை நரைக்கவேயில்லை.

தமிழ் வித்துவான்கள்

எங்கள் பந்துக்களில் தமிழ் வித்துவான்களும் சிலர் உண்டு. முன்னே கூறிய என் பாட்டனாரின் மாமனாராகிய ஓதனவனேசுவரைய ரென்பவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர். சங்கீதத்திலும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவர் தமிழில் பிரசங்கம் செய்யும் திறமையுடையவர். அடிக்கடி புதுச்சேரி முதலிய வெளியூர்களுக்குச் சென்று திருவிளையாடல், கம்பராமாயணம், பாரதம் முதலிய நூல்களைத் தொடர்ந்து சில நாட்கள் பிரசங்கம் செய்துவிட்டு ஊரார் அளிக்கும் சம்மானங்களைப் பெற்று வருவார்.

உத்தமதானபுரத்தில் லிங்கப்பையர் என்ற வித்துவான் ஒருவர் இருந்தார். அவரும் தமிழ்ப் புலமை மிகுந்தவர்; செய்யுள் இயற்றும் ஆற்றலும் உடையவர்; சங்கீதப் பயிற்சியும் பெற்றவர்; கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதிற் புகழ் வாய்ந்தவர்.

அவர் பல தமிழ்க் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள சுவாமிமலை என்னும் சுப்பிரமணிய ஸ்தல விஷயமாக ஒரு குறவஞ்சி நாடகத்தை அவர் பாடி அரங்கேற்றினார். உத்தமதானபுரம் கோவிலிலுள்ள அம்பிகையாகிய ஸ்ரீ ஆனந்தவல்லி மீதும் மகாகணபதியின் மீதும் பல கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார். அவற்றை அக்காலத்தில் எங்கள் ஊரில் அவர் குமாரர்களும் பிறரும் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஒரு கீர்த்தனமும் கிடைக்கவில்லை.

சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் வல்ல வித்துவான்கள் பலர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்கள். பாடுவோரும்