பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில பெரியோர்கள்

21

பாராட்டுவோரும் இல்லாமையால் வரவர அக்கீர்த்தனங்கள் மறைந்து போயின. ஆயிரக்கணக்கான தமிழ்க் கீர்த்தனங்கள் இந்நாட்டில் முன்பு வழங்கி வந்தன. கர்நாடக ராகங்களின் கதிக்கு மிகவும் பொருத்தமாக அவை அமைந்திருந்தன. அன்று நான் கேட்ட அவை, இன்று இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. “தமிழில் கீர்த்தனங்களே இல்லை” என்று கூறவும் சிலர் அஞ்சுவதில்லை. எல்லாம் சற்றேறக் குறைய அறுபது வருஷங்களில் நிகழ்ந்த மாறுபாடு. இந்த மாறுபாட்டின் வேகத்திலே லிங்கப்பையரின் சாகித்தியங்களும் அகப்பட்டு மறைந்தன.

லிங்கப்பையருக்குச் சேஷுவையர், சாமிநாதையர் என்ற இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். தந்தையாரைப் போல் அவர்கள் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சியும் வாக்குவன்மையும் பெற்றிருந்தார்கள். ஊர்தோறும் சென்று அருணாசல கவியின் இராமாயணக் கீர்த்தனங்களைப் பாடிப் பொருள்சொல்லிக் காலக்ஷேபம் செய்து வந்தனர். அவ்வாறு சொல்லும்பொழுது இடையிடையே கம்ராமாயணத்திலிருந்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செய்யுட்களை இசையுடன் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். அவர்களுடைய இனிய சாரீரமும், அருணாசலகவி இராமாயணக் கீர்த்தனங்களின் அமைப்பும், கம்பராமாயணச் செய்யுட்களின் பொருளாழமும் கேட்போர் மனத்தைக் கவர்ந்தன.

அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் இராமாயண, பாரத, பாகவதங்களிலும் புராணக் கதைகளிலும் ஜனங்களுக்கு அதிக விருப்பம் இருந்தது. புலவர்கள் புராணங்களைப் பாடுவதில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த பம்பரஞ்சுற்றி யென்னும் ஊரிலிருந்த சுப்பையரென்னும் வித்துவான் ஒருவர் மயில்ராவணன் சரித்திரத்தைத் தமிழில் கீர்த்தனங்களாகப் பாடியிருந்தார். அச்சரித்திரக் கீர்த்தனங்களையும் அவ்விரண்டு சகோதரர்களும் கற்றுக்கொண்டு சில சில இடங்களில் அவற்றைப் பாடிப் பொருளுரைத்து வந்தார்கள். இராமாயணக் கீர்த்தனத்தைப் பாடுகையில் இடையிடையே கம்பராமாயணச் செய்யுட்களைச் சொல்வதுபோல, மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனத்தைப் பாடிப் பொருள் சொல்லுகையில் உபயோகிப்பதற்கு அச்சரித்திர சம்பந்தமான செய்யுட்கள் இல்லை; ஆதலின் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி வேறு பொதுவான செய்யுட்களைச் சொல்லி வந்தார்கள். ஆனாலும் அச்சரித்திர சம்பந்தமான பாடல்கள் இல்லையே யென்ற குறை அவர்களுக்கு இருந்து வந்தது. “அப்பா இருந்தால் அவரைப் புதிய செய்யுட்களைப் பாடும்படி சொல்லலாம். இப்போது யார் நமக்குப் பாடித் தருவார்கள்?” என்று எண்ணி வருந்தினார்கள்.