பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்கு வந்த ஜ்வரம்

தேகநிலையைப் பார்த்தான். ஜ்வரக்கட்டியிருப்பதாகச் சொல்லி மருந்து கொடுக்கலானான். சங்கத் திராவகமென்னும் ஒளஷதத்தைக் கொடுத்தான். கட்டி வரவரக் கரைந்து வந்தது. ஜ்வரமும் தணிந்தது; “காத்தான் என்னை நோயினின்றும் காத்தான்” என்று சொல்லி அவனை நான் பாராட்டினேன்.

குடும்ப நிலை

ஸ்ரீமுக வருஷம் மாசி மாதம் முதலில் (1874 பிப்ரவரி) நான் உத்தமதானபுரத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு மாதகாலம் பரிகாரம் பெற்றேன். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட நூல்களைப் படித்துக்கொண்டே பொழுதுபோக்கினேன்.

அயலூர்களிலுள்ள மிராசுதார்கள் என்பாலும் என் தந்தையார்பாலும் அன்புவைத்து அடிக்கடி நெல் அனுப்பி வந்தார்கள். ஆயினும் குடும்ப காலக்ஷேபம் சிரமந்தருவதாகவே இருந்தது. அதனோடு என் கலியாணத்தின்பொருட்டு வாங்கிய கடனில் 150 ரூபாய் கொடுபடாமல் நின்றது. அத்தொல்லை வேறு துன்பத்தை உண்டாக்கியது. உடலில் இருந்த நோய் வரவரக் குறைந்து வந்தாலும் உள்ளத்தே ஏற்பட்ட நோய் வளர்ந்து வந்தது. அதுகாறும் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் நான் இருந்து வந்தேன். என் தந்தையாரும் வரவர விரக்தி உடையவராயினர். சிறிய தகப்பனாரோ குடும்ப பாரத்தைச் சுமக்க இயலாமல் தத்தளித்தார்.

“இந்நிலையில் நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது தர்மமன்று” என்று கருதினேன். “இனி, குடும்பக் கடனைப் போக்குவதில் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்” என்ற எண்ணம் வலியுற்று வந்தது. “பிள்ளையவர்களைவிட்டு வந்தோமே, மீண்டும் அங்கே போகவேண்டாமோ! குடும்பப்பாரத்தைச் சுமப்பது எப்பொழுதும் உள்ளது. பிள்ளையவர்களிடமிருந்து கல்வி அபிவிருத்தி பெறுவதற்குரிய இச்சந்தர்ப்பத்தை நாம் விடக்கூடாது” என்று வேறொரு யோசனை தோற்றியது. “நாம் கடனாளி என்றால் அவர்களும் கடனாளியாகத்தானே இருக்கிறார்கள்? எப்படியாவது கடனை நீக்கிக்கொண்டால் பிறகு பழையபடியே அவர்களிடம் போய்ச் சேர்ந்துகொள்ளலாம். கடனை வளரவிடக்கூடாது” என்ற எண்ணமே விஞ்சி நின்றது.

நான் அடைந்த ஏமாற்றம்

ஒருநாள் உத்தமதானபுரத்திலிருந்து கும்பகோணம் சென்று தியாகராச செட்டியாரைப் பார்த்தேன். மீட்டும் எனக்கு ஏதேனும்