பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடற் பிரசங்கம்

361

பிரசங்கம் செய்து புண்ணியத்தையும் புகழையும் பொருளையும் ஒருங்கே பெறலாம்.

எல்லாம் உண்மைதான். ஆனால், என் தமிழ்க்கல்வி அதனோடு நின்றுவிட வேண்டியதுதானா? கிடைத்தற்கரிய பாக்கியமாகப் பிள்ளையவர்களுடைய அன்பையும் அவர் மூலமாகத் திருவாவடுதுறை யாதீனப் பழக்கத்தையும் பெற்றபின் அவற்றை மறந்து ஊர் ஊராய் அலைந்து வாழ்வது நன்றா? இறைவன் இந்த நிலையிலே விட்டுவிடுவானா?

என் மனம் இப்படியெல்லாம் பலவாறு பரந்து விரிந்துசென்று எண்ணமிட்டது. “இப்போது கழுத்தைப் பிடித்து இறுக்கித் துன்புறுத்தும் கடன்தொல்லையைத் தீர்ப்பது முக்கியமான காரியம்” என்ற நினைவினால், செங்கணத்திற்குப் போகலாமென்று தந்தையாரிடம் சொன்னேன். அவருக்கு உண்டான திருப்திக்கு எல்லையில்லை. கடன் தீர்வதற்கு வழி ஏற்பட்டதென்பது மாத்திரம் அத்திருப்திக்குக் காரணம் அன்று; தாம் பழகிய இடங்களை மீட்டும் பார்க்கலாமென்ற ஆவலே முக்கியமான காரணம்.

அத்தியாயம்—59

திருவிளையாடற் பிரசங்கம்


நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே பவ டு வைகாசி (1874 ஜூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தை நோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒருவேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடைய விஷயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்பு பழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர்.

செங்கண நிகழ்ச்சிகள்

பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கே விருத்தாசல ரெட்டியாரும் வேறு பழைய நண்பர்களும் எங்களைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியை அடைந்தார்கள். விருத்தாசல ரெட்டியார் என்னைக் கண்டு உள்ளம் பூரித்துப்போனார். “குன்னத்து ஐயரும் அவர் பிள்ளையும் வந்திருக்கிறார்கள்” என்ற