பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

என் சரித்திரம்

செய்தி எங்கும் பரவியது. எங்களை முன்னரே அறிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வந்து பார்த்து அன்பு கனியப் பேசி மகிழ்ந்தார்கள்.

முன்பே அங்கே தங்கியிருந்த காலத்தில் காணாத ஒரு விஷயத்தை அப்பொழுது உணர்ந்தேன். நான் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டவனென்பது எனக்கு ஒரு தனி மதிப்பை உண்டாக்கியது. பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, கவித்துவம் முதலியவற்றைப் பற்றி யாவரும் கதை கதையாகப் பேசினார்கள். அவரிடத்தில் தங்களுக்குத் தெரிந்த ஒருவர் மாணாக்கராக இருக்கிறாரென்பதில் அவர்கள் ஒரு திருப்தியையும் பெருமையையும் அடைந்தார்கள். என்னுடைய கல்வியபிவிருத்தியில் விருப்பமுடையவர்களில் அப்பிரதேசத்திலிருந்த அன்பர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புக்ககம் போய் நல்லபெயர் வாங்கிய ஒரு பெண் பிறந்த வீட்டுக்கு வந்தால் அங்குள்ளவர்கள் எவ்வளவு அன்போடும் பெருமையோடும் உபசரிப்பார்களோ அவ்வளவு உபசாரம் எனக்கு நடந்தது. நான் பிள்ளையவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் திறந்தவாய் மூடாமல் அங்கேயுள்ளவர்கள் கேட்பார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களிலிருந்து அரிய பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறும்போது என் ஆசிரியரது புலமையையும் நான் அவராற் பெற்ற பயனையும் உணர்ந்து உணர்ந்து ஆனந்தமடைந்தார்கள்.

அதற்குமுன் நான் என் தந்தையாரைச் சார்ந்து நிற்பேன். வருபவர்களெல்லாம் அவருக்கு உபசாரம் செய்வதும் அவர் இசைப்பாட்டுக்களைக் கேட்பதுமாக இருப்பார்கள். அப்பொழுதோ என் தந்தையார் என்னைச் சார்ந்து நிற்கும் நிலையில் இருந்தார். என்னிடம் பேசுவதும் என் மூலமாக விஷயங்களை அறிந்துகொள்வதுமாகிய காரியங்களில் அன்பர்கள் ஈடுபட்டனர்.

“எல்லாம் பெரிய ஐயர் செய்த பூஜாபலன்” என்று என் தந்தையாரைப் பாராட்டி முடிக்கும்போது, அவர்களுக்கு என் தந்தையாரிடம் இருந்த அன்பு வெளிப்பட்டது.

என் ஆசிரியர் இயற்றிய வாட்போக்கிக் கலம்பகம் முதலிய நூற் செய்யுட்களை விருத்தாசல ரெட்டியாரிடம் சொல்லிக்காட்டினேன். அவர் பெரும்புதையலைக் கண்டவரைப்போன்ற ஆச்சரியத்துடன் அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதிக்கொண்டார். அவரிடம் நான் காரிகை பாடங் கேட்டதையும் அப்பாடம் என் மனத்தில் பதிந்து-