பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடற் பிரசங்கம்

365

தமக்கு நண்பருமாகிய கிருஷ்ணசாமி ரெட்டியாரென்பவரிடம் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று சொல்லி அவரது உடன்பாட்டைப் பெற்று எங்களைக் காரைக்கு அனுப்பினார்.

காரையில் அவர் சின்னப் பண்ணையைச் சார்ந்தவர். அவர் தெலுங்கிலும் தமிழிலும் வல்லவர்; சாந்தமான இயற்கையுள்ளவர்.

எங்களுடைய கஷ்டத்தைத் தீர்ப்பதற்கு வழியென்னவென்று அவர் ஆராய்ந்தார். பிறகு நான் திருவிளையாடற் புராணம் வாசிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. ஊரிலுள்ளவர்களிடம் தெரிவித்து அம்முயற்சியை எல்லாரும் ஆதரிக்கும்படி செய்தார்.

புராணப் பிரசங்கம்

புராணம் ஒரு நல்லநாளில் ஆரம்பிக்கப்பெற்றது. எனது முதல் முயற்சியாதலால் நான் மிகவும் ஜாக்கிரதையாக உபந்நியாசம் செய்துவந்தேன். நாள்தோறும் உதயமாகும்போதே எங்களுக்கு வேண்டிய அரிசி முதலிய உணவுப் பொருள்களும் காய்கறிகளும் வந்துவிடும். என் தாயார் அவற்றைக் கண்டு உள்ளம் குளிர்ந்துபோவார். அதே மாதிரியான உபசாரங்களை முன்பு என் தந்தையார் பிரசங்கம் செய்த காலத்திலே கண்டிருந்தாலும் அவை நான் சம்பாதித்தவை என்ற எண்ணமே அந்தச் சந்தோஷத்திற்குக் காரணம். “குழந்தை கையால் சம்பாதித்தது” என்று ஒவ்வொரு பொருளையும் வாங்கி வாங்கி வைத்துக்கொள்வார்.

என் தந்தையாரும் கவலையின்றி ஆனந்தமாகச் சிவபூஜையும் ஈசுவரத் தியானமும் செய்துவந்தார். எனக்கும் “கடவுள் இந்த நிலையில் குடும்பத்துக்கு உபயோகப்படும்படி நம்மை வைத்தாரே” என்ற எண்ணத்தால் திருப்தியும் ஊக்கமும் உண்டாயின.

கவலையை நீக்கிய மழை

இவ்வளவு மகிழ்ச்சிக்கிடையே ஒரு கவலை எழுந்தது. நான் புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கிய காலத்தில் அப்பிரதேசங்களில் மழையே இல்லை. அதனாற் குடிஜனங்கள் ஊக்கம் இழந்திருந்தனர். கிருஷ்ணசாமி ரெட்டியாரும் வேறு சிலரும் கிராமத்தார்களிடம் பிரசங்க விஷயத்தை எடுத்துச்சொல்லி அவர்கள் அளிக்கும் பொருளைத் தொகுத்துப் புராணம் நிறைவேறும் காலத்தில் எனக்குச் சம்மானம் செய்வதாக எண்ணியிருந்தனர். மழை இல்லையென்ற குறையால் அம்முயற்சியிலே தலையிட அவர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை. புராணம் முழுவதும் நடத்து-