பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

என் சரித்திரம்

வதற்குப் போதிய ஆதரவு கிடைக்குமோ என்ற சந்தேகங்கூட உண்டாயிற்று. மீனாட்சி கலியாணத்தோடு நிறுத்திக்கொள்ளலாமென்று எண்ணியிருந்தனர்.

புராணத்தில் நாட்டுப் படலம் நடந்தது. நான் என் இசைப் பயிற்சியையும் தமிழ்நூற் பயிற்சியையும் நன்றாகப் பயன்படுத்தினேன். நான் கற்ற நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லிப் பொருள் உரைப்பேன். கேட்பவர்கள், “எவ்வளவு புஸ்தகங்கள் வாசித்திருக்கிறார்!” என்று ஆச்சரியமடைவார்கள்.

எனது நல்லதிருஷ்டவசமாக ஒருநாள் பிரசங்கம் நடக்கையிலே பெருமழை பெய்து பூமியையும் மனிதர் உள்ளங்களையும் குளிர்வித்தது. அதனால் அங்குள்ளவர்கள் விளைக்கும் பயிரில் விளைவு இருந்ததோ இல்லையோ, நான் செய்த ‘சொல்லுழ’வில் பெரிய லாபம் உண்டாயிற்று. “திருவிளையாடற் புராணம் ஆரம்பித்ததனாலேதான் மழை பெய்தது” என்ற பேச்சு ஜனங்களிடையே பரவியது. எனக்கு எதிர்பாராதபடி மதிப்பு உயர்ந்தது. அப்பாற் புராணப் பிரசங்கத்தை நிறுத்த வேண்டுமென்பதை அவர்கள் அறவே மறந்தனர்.

புராணப் பிரசங்கம் ஊரின் இடையே உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது. தினந்தோறும் இரவில் ஏழுமணி முதல் பத்துமணி வரையில் நிகழும். அயலூர்களிலிருந்து பலர் வருவார்கள். மழை பெய்த பிறகு வருபவர்தொகை அதிகமாயிற்று. ஜனக்கூட்டம் அதிகமாக ஆக நாங்கள் பெற்ற ஆதரவும் மிகுதியாயிற்று.

கேட்போர்

அந்த ஊரில் மீனம்மாள் என்ற ரெட்டியார் குலத்துப் பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் வேதாந்த சாஸ்திரங்களில் தேர்ந்த அடக்கமும் தெய்வபக்தியும் உபகார சிந்தையும் உடையவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு நாளும் தம் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே என் பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து வந்தார். அவருடன் என் தாயாரும் அங்கே இருந்து கேட்டு இன்புறுவார். மீனம்மாள் எங்களுக்குப் பல வகையில் உதவிசெய்து வந்தார்.

அக்காலத்தில் கும்பகோணம் மடத்து ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் பெரும்புலியூருக்கு எழுந்தருளினார். அவருடன் வந்திருந்த சாஸ்திரிகள் இருவர் காரைக்கு வந்திருந்தனர். அவர்-