பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

என் சரித்திரம்

வடிவாக ஸ்ரீ சுந்தரேசக் கடவுளும் எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லும் பொருளும் ஒருங்கே தோற்றியது போன்ற வடிவத்தோடும் அவ்விருவர் திருநாமங்களும் இயைந்த மீனாட்சி சுந்தரம் என்ற பெயரோடும் விளங்குபவர் ஆசிரியர் என்ற கருத்து நான் எழுதிய செய்யுளில் அமைந்திருந்தது.

பிரிவுத் துன்பம்

என் கடிதத்தில் நான் திருவிளையாடற் புராணம் வாசித்து வருவதாகவும், விரைவில் முடித்துவிட்டுப் பாடம் கேட்க வர எண்ணி இருப்பதாகவும் எழுதியிருந்தேன். ஆசிரியர் விடைக் கடிதம் எழுதுவாரென்று நம்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நான் பல மாதங்கள் பிரிந்திருப்பதனால் என் மேல் கோபம்கொண்டாரோ, அல்லது நான் வருவதாக எழுதியிருந்ததை அவர் நம்பவில்லையோ என்று எண்ணலானேன். நான் ஆசிரியரைக் கண்ட முதல் நாளில், “எவ்வளவோ பேர்கள் வந்து படிக்கிறார்கள். சில காலம் இருந்துவிட்டுப் போய்விடுகிறார்கள்” என்று அவர் சொன்னது என் நினைவுக்கு வந்தது. “அவ்வாறு போனவர்களில் என்னையும் ஒருவனாகக் கருதிவிட்டார்களோ!” என்று நினைத்தபோது எனக்கு இன்னதென்று சொல்ல முடியாத துக்கம் எழுந்தது. “நாம் இங்கே வந்தது பிழை. அவர்களைப் பிரிந்து இவ்வளவு மாதங்கள் தங்கியிருப்பது உண்மை அன்புக்கு அழகன்று” என்று எண்ணினேன். இவ்வெண்ணம் என் மனத்தில் உண்டாகவே காரையில் நிகழ்ந்த பிரசங்கம், அங்குள்ளவர்களது அன்பு, இயற்கைக் காட்சிகள் எல்லாவற்றையும் மறந்தேன். என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப் பாலைவனமாக்கிவிட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு வைத்துப் பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது. எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்தபோதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர் ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத் தோற்றவில்லை.

“விரைவில் புராணத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்களிடம் போகவேண்டும்” என்று என் தந்தையாரிடம் சொல்லத் தொடங்கினேன்.

அவர் இன்னும் சில மாதங்கள் அங்கே தங்கியிருக்க வேண்டுமென்று விரும்பினார். எனது கல்வி அந்த அளவிலே என் ஜீவனத்-