பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பரில் தீர்ந்த பசி

371

திற்குப் போதுமானதென்றுகூட அவர் எண்ணியிருக்கலாம், என் கருத்தை அவர் மறுக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை.

பிரசங்க நிறுத்தம்

திருவிளையாடல் ஒருவாறு நிறைவேறியது. ஒரு புராணம் முடிவுபெற்றால் கடைசி நாளன்று பெரிய உத்ஸவம்போலக் கொண்டாடிப் புராணிகருக்கு எல்லோரும் சம்மானம் செய்வது வழக்கம். காரையிலும் அயலூர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாக இருந்தார்கள். கிருஷ்ணசாமி ரெட்டியார் எல்லோரிடமிருந்தும் பொருள் தொகுத்து வந்தார். முற்றும் தொகுப்பதற்குச் சில தினங்கள் சென்றன. அதனால் புராணத்தில் கடைசிப் படலத்தை மட்டும் சொல்லாமல் அதற்கு முன்புள்ள படலம் வரையில் நான் சொல்லி முடிந்தபிறகு சில நாள் பிரசங்கம் நின்றிருந்தது.

பிரயாணம்

பிள்ளையவர்கள் கடிதம் எழுதவில்லையே என்ற கவலை என் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பிரசங்கத்தைச் சில நாட்கள் நிறுத்தும் சமயம் நேர்ந்தவுடன், ஆசிரியரைப் போய்ப் பார்த்து வர அதுதான் சமயமென்றெண்ணி என் தாய், தந்தையரைக் காரையிலே விட்டுவிட்டு நான் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டேன். என் வேகத்தைக் கண்ட என் தந்தையார் என்னைத் தடுக்கவில்லை. “போய்ச் சீக்கிரம் வந்து விடு; புராணப் பூர்த்தியை அதிக நாள் நிறுத்தி வைக்கக்கூடாது” என்று மட்டும் சொல்லி அனுப்பினார்.

அங்கே இல்லை

என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவைகளில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப்போல காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோதுதான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது. நேரே மடத்துக்குச் சென்றேன். முதலில் ஓர் அன்பர் என்னைக் கண்டதும் என் க்ஷேம சமாசாரத்தை விசாரித்தார். நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை. “பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று அவரை விசாரித்தேன்.

“அவர்கள் இங்கே இல்லை” என்று பதில் வந்தது. எனக்குத் திடுக்கிட்டது. அடுத்தபடி ஒரு தம்பிரானைக் கண்டேன். அவர்