பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

என் சரித்திரம்

பிரத்தியட்ச அகத்தியர்

இவ்வாறு முனிவர் துதிசெய்யச் சோமசுந்தரக் கடவுள் பிரசன்னமாகி அவர்களை நோக்கி, “உங்களுடைய தோத்திரம் நமக்கு ஆனந்தத்தை அளித்தது” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த விஷயத்தைக் கூறும் பாடல் வருமாறு:

“எனத்துதித்த வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை
     எறிதே னீப
வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய்
     வந்து நோக்கிச்
சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர் செய்த பூசைதுதி
     தெய்வத் தானம்
அனைத்தினுக்கு மனைத்துயர்க்கு நிறைந்துநமக் கானந்தம்
     ஆயிற் றன்றே.”

[குறுமுனி—அகத்திய முனிவர். நீபவனம்—கடம்ப வனம்; மதுரைக்கு ஒரு பெயர். மூர்த்தியாய்—திருவுருவமுடையவராகி. தெய்வத்தானம்—க்ஷேத்திரங்கள்.]

நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேஷ உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு அகத்தியருக்கும் உண்டு. அகத்தியர் பரம சிவபக்தர். சிவபெருமானுக்குச் சமமானவர். இவ்வளவு பெருமையையும்விடத் தமிழை வடமொழியோடு ஒத்த சிறப்புடையதாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது. தமிழ் நூல் செய்த பரஞ்சோதி முனிவர் அவரைத் தனியே சொல்லாவிட்டால் அபசாரமென்று நினைத்து அவ்வாறு சொன்னார். தமிழ் ஆசிரியராகிய அகத்தியரைத் தமிழ்க் கவிஞர் இவ்வாறே பாராட்டுவார்கள். தமிழாசிரியர்களுக்கு உள்ள பெருமை அளவு கடந்தது. இப்போது பிரத்தியட்ச அகத்தியராக விளங்குபவரும் என்னுடைய ஆசிரியருமாகிய பிள்ளையவர்களை எல்லோரும் தெய்வம்போலக் கொண்டாடி வருகிறார்கள்.