பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசங்க சம்மானம்

379

இவர்களுக்கே இவ்வளவு பெருமை இருக்கும்போது அகத்தியருக்கு எவ்வளவு பெருமை இருக்க வேண்டும்! பரஞ்சோதி முனிவரைப் போல நாமும் தமிழாசிரியர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அகத்தியரைப் போன்ற சிவபக்தியும் தமிழ்த் தலைமையும் உடைய பிள்ளையவர்களிடத்தில் நான் மீண்டும் செல்வதாக எண்ணியிருக்கிறேன். எல்லோரும் விடைதர வேண்டும்” என்று சொல்லி முடித்தேன்.

பிரிவில் வருத்தம்

முனிவர்கள் கூறிய தோத்திர இன்பத்தில் ஆழ்ந்திருந்த யாவரும் திடீரென்று வருத்தத்தை அடைந்தனர். நான் காரையைவிட்டுப் புறப்பட்டுப் போவேனென்பது பல பேருக்குத் தெரியும். ஆனாலும் நானே அச்செய்தியை நேரே சொன்னபோது அவர்களுக்கு அடக்க முடியாத துயரம் பொங்கியது. சிலர் கண்ணீர் விட்டார்கள் அந்த அன்பை இன்று நினைத்தாலும் என் உள்ளம் உருகுகிறது.

பிரசங்கம் வாழ்த்தோடு நிறைவேறியது. பிறகு சம்மானங்கள் பலவாறாக வந்தன. ஆடைகள், பணம் எல்லாம் கிடைத்தன. இருநூறுரூபாய் வரையில் பணம் கிடைத்தது. செலவுக்காக வாங்கியிருந்த சிறு கடன்களுக்குக் கொடுத்ததுபோக நூற்றைம்பது ரூபாய் மிஞ்சியது. அதைக்கொண்டு கல்யாணத்துக்கு வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததைத் தீர்த்துவிட்டோம்.

எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டேன். முக்கியமானவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து, “ஐயா எங்களை மறக்க வேண்டாம். உங்கள் குறையைத் தீர்த்துக்கொண்டு இங்கேயே வந்திருந்து எங்கள் குறையையும் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்கள் பேச்சிலேதான் எத்தனை அன்பு! எத்தனை மென்மை! எத்தனை உருக்கம்! கடவுள், அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கிறார். அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமானமாகிவிடும்.

செங்கணத்தில் நிகழ்ந்தவை

கிருஷ்ணசாமி ரெட்டியார் தாமாக விடை அளிக்கவில்லை. நாங்கள் வலிந்து அவரிடம் விடைபெற்றோம். விடைபெறும்போது அவர், “நீங்கள் பாகவதத்தைப் பரிசோதித்து அச்சிட்டால் சகாயம் செய்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். “பார்க்கலாம்” என்று சொல்லி என் தாய் தந்தையருடன் புறப்பட்டுச் செங்கணத்துக்கு வந்து சேர்ந்தேன்.