பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

என் சரித்திரம்

சொன்னார்கள். “ரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர்.

வேதநாயகம் பிள்ளை விண்ணப்பம்

அரசாங்கத்தார் அந்நோய் பரவாதபடி மருந்துகளை ஊர்தோறும் வாங்கிக் கொடுத்தனர். மாயூரத்தில் இருந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையும் தம்மாலான உதவியைச் செய்தார். அன்றியும் அந்நோய்க்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்தை அமைத்துச் சில பாடல்களை இயற்றிச் சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அப் பாடல்களில் ஒன்று வருமாறு:

(கட்டளைக் கலித்துறை)

“இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி
மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்
விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா
நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.”

[மும்மல நோய் கெடும்படி ஞானாசிரியனாக உலகத்தில் தங்குகின்ற சுப்பிரமணிய தேசிக, இலக்கணத்திற் சொல்லப்படும் எழுத்தாகிய மெய்க்கு அரை மாத்திரை கால அளவு. இப்போது அந்த அளவு கூடத் தம் மெய்களுக்கு இல்லாமல் விஷபேதியாகிய மலநோயால் பலர் இறந்தனர். இந்நோயை விலக்கத் திருவருள் புரிய வேண்டும்.]

அவ்விண்ணப்பத்தைப் பெற்ற தேசிகர் பணம் கொடுத்து மருந்தை ஏராளமாக வாங்கச் செய்து கிராமந்தோறும் அனுப்பிக் கிராம முன்சீபுகளைக்கொண்டு விநியோகிக்கும்படி செய்தனர்.

என் தாய், தந்தையர் என்னைப்பற்றிக் கவலையடைவார்களென்ற எண்ணத்தால் நான் சௌக்கியமாக இருப்பதைக் கடித மூலம் அவர்களுக்கு அடிக்கடி தெரிவித்துவந்தேன்.

சிறிய தகப்பனார்

சீகாழி தாலூகாவில் இடமணலென்னும் கிராமத்தில் என் சிறியதாயாராகிய மீனாட்சி அம்மாளின் கணவர் கர்ணமாக வேலை பார்த்து வந்தார். அவர் பெயர் சுந்தரமையர் என்பது. சாந்தமான இயல்பும் சுறுசுறுப்பும் உடையவர் அவர்; சங்கீத ஞானம் உள்ளவர்; சிவபக்திச் செல்வர். திருவாவடுதுறையில் அக்காலத்தில் கர்ணமாக இருந்தவர் வேறு கிராமத்துக்குப் போகவேண்டு மென்ற