பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டைத் தீபாவளி

383

நோக்கத்தோடு இருந்தார். என் சிறிய தந்தையார் திருவாவடுதுறைக்கு வர விரும்பினார். இவ்விருவரும் கலந்து பேசித் தம் இடங்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டார்கள். இந்த ஏற்பாட்டால் என் சிறியதந்தையார் திருவாவடுதுறைக்குத் தம் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். அதற்கு என் முயற்சியும் காரணமாக இருந்தது.

அவர் திருவாவடுதுறைக்கு வந்தபோது, “இனி யாதொரு கவலையுமின்றிச் சரியான வேளையில் ஆகாரம் செய்துவிட்டு இவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வரலாம்” என்று எண்ணினேன். அவர்கள் வீட்டிலே போஜனம் செய்துவரலானேன்.

மடத்திலிருந்து அவ்வப்போது வேண்டிய பொருள்கள் அவ்வீட்டிற்கு வரும். அவற்றைக் கண்டு என் சிறியதாயார் என்னைப் பாராட்டுவார். என் தாயாருக்கு என்பாலுள்ள அன்பு அவருக்கும் இருந்தது. ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. என் அன்னையார் என்னைச் சில சமயங்களில் கடிந்துகொள்வார். சிறியதாயாரிடம் நான் வெறுப்புக்குறிப்பை என்றும் கண்டதில்லை. குளிர்ந்த நேரத்தில் நினைத்துப் போற்றுவதற்குரிய உத்தமர்களில் அவர் ஒருவர். பொறுமை என்பது அவருக்கு ஓர் ஆபரணம்.

என் சிறிய தந்தையாரும் என்பால் அன்பாகவே இருந்தார். அவருண்டு; அவர் வேலையுண்டு; புற விஷயங்களில் அவர் தலையிடார். மடத்தின் நிலங்களே உள்ள அந்தக் கிராமத்தில் அவர் உத்தியோகம் பார்த்தாலும் வலிந்து மடத்திற்குச் சென்று ஆதீனகர்த்தரோடு பழகிப் பிரியம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இப்படி இருந்ததனால் மடத்தைச் சார்ந்தவர்கள் அவரிடம் மதிப்போடு பழகினார்கள்.

கம்பராமாயணப் பாடம்

எங்கள் ஆசிரியர் கம்பராமாயணப் பாடம் சொல்லி வந்தார். இராமாயணத்தின் இணையற்ற சுவையும் அவருக்குத் தமிழில் இருந்த அன்புமே அப்பாடம் நடைபெறுவதற்குக் காரணம். இல்லையெனில் அந்நிலையில் ஆசிரியர் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லவே இயலாது. அவர் தேகம் அவ்வளவு தளர்ச்சியை அடைந்திருந்தது. பித்தப்பாண்டு என்னும் நோய் அவரைப் பற்றிக்கொண்டது. அவர் பாதத்தைப் பிடித்து வயிற்றையும் வீங்கச்செய்தது. அடிக்கடி சோர்வும் இளைப்பும் உண்டாயின.

இயல்பாகப் பாடஞ் சொல்லும் ஊக்கம் அவருக்கு அப்போது இல்லை. தினந்தோறும் நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்கள்