பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

என் சரித்திரம்

நடைபெற்றன. ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்லவில்லை. நாங்கள் படித்துக்கொண்டே போவோம். இடையிடையே நயமான பகுதிகளுக்கே குறிப்பாகப் பொருள் சொல்லுவார். எங்களுக்குப் பாடஞ் சொல்லுவதென்பது பெயரளவில் இருந்தது; ஆனால் அவர் அவற்றைப் பூரணமாக அனுபவித்தார். இராமாயணப் பாடல்கள் அவர் தளர்ந்த நிலையில் மருந்தாக உதவின.

இடையிடையே கம்பரது வாக்கைப் பாராட்டி உருகுவார். சில பாடல்களை மீண்டும் மீண்டும் பலமுறை படிக்கச் சொல்வார். அவற்றை விளக்கிச் சொல்லி இன்ன இன்ன நயங்கள் உள்ளனவென்று எடுத்துக்காட்டுவதைவிடப் பல முறை படிக்கச்செய்து கேட்டு அனுபவிப்பதில் அதிக இன்பம் அவருக்கு இருந்தது. சில பாடல்களுக்கு அவர் வார்த்தைகளால் பொருள் சொல்லவில்லை; கண்ணீர்விட்டு உருகி நின்ற அவர் மெய்ப்பாடுகள் உரை கூறின. “இனிமேல் இப்படி யார் பிறக்கப் போகிறார்கள்? என்ன அழகு! என்ன அழகு! யோசித்துப்பாடிய பாட்டுக்களா இவை? இயற்கையாக வருகிற வாக்கின் நயந்தான் எப்படி இருக்கிறது!” என்பார். கம்பர் பாடலை நாமும் உணர்ந்து இன்புறுகிறோம்; அவரும் உணர்ந்து அனுபவித்தார். ஆனால் கவிஞராகிய அவர் பெற்ற அனுபவம் நமக்கு இருக்குமோ என்பது சந்தேகந்தான். கவிஞன் உள்ளத்தைக் கவிஞன் உணரும்முறையே வேறுபோலும்!

கம்பரை ஆசிரியர் பாராட்டும்போதெல்லாம் நான் கம்பரைக் காட்டிலும் ஆசிரியரைப் பற்றியே அதிகமாக நினைப்பேன். “இப்பெரிய நூலை முன்பே கேளாமற் போனோமே!” என்ற வருத்தம் உண்டாகும். “இவர்களுக்கு இவ்வியாதி வந்திருக்கிறதே; எப்படி முடியுமோ!” என்ற பயமும் என் மனத்தை அலைத்து வந்தது.

ஆசிரியர் இயற்றிய நூல்கள்

இவ்வாறு நோயினால் ஆசிரியர் வருந்தினாலும் அவருடைய கவியாற்றல் மெலிவுறவில்லை. திருவிடைமருதூர் ஸ்தல விஷயமாக ஒரு திரிபந்தாதியை அவர் இயற்றத் தொடங்கினார். ஆதீனத்தார் விரும்பியபடி ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரத்தை விரிவாகச் செய்யத் தொடங்கினார். இவ்விரண்டு நூல்களில் திரிபந்தாதி மாத்திரம் பூர்த்தியாயிற்று. சிவஞான யோகிகளிடத்தில் அவருக்கு அளவற்ற அன்பு இருந்தது. அதனால் அவர் சரித்திரத்தை ஒரு காவியம்போல அமைக்க எண்ணி நாடு, நகரச் சிறப்புக்களைப் பாடத்தொடங்கினார், திருவாவடுதுறையின் பெருமைகளையும் ஆதீன குரு