பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டைத் தீபாவளி

385

பரம்பரையின் சிறப்பையும் நன்றாகப் பாடவேண்டுமென்பது அவர் அவா. இவ்வளவு பெரிய அஸ்திவாரத்தோடு ஆரம்பித்த அது நிறைவேறாமற்போயிற்று.

ஆசிரியர் நோயால் துன்புறுவதை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் அவரைத் திருவிடைமருதூருக்குத் தக்க சௌகரியங்களுடன் அனுப்பி அங்கே உள்ள கட்டளைமடத்தில் இருந்துவரச் செய்தனர். திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியராக இருந்த சேஷாசல நாயுடு என்பவர் அவருக்கு மருந்து கொடுத்துவந்தார். ஆலயத்திற் பீடா பரிகாரமாக அருச்சனை முதலியன நடந்தன.

நானும் வேறு மாணாக்கர்களும் திருவாவடுதுறையிலே இருந்தோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நாங்கள் திருவிடைமருதூருக்குப் போய் ஆசிரியரைப் பார்த்துவந்து சுப்பிரமணிய தேசிகரிடம் அவரது நிலைமையைத் தெரிவிப்போம்.

சங்கீத ஒளஷதம்

நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது.

மணிமந்திர ஒளஷதங்களால் எவ்வளவோ முயன்றும் ஆசிரியரது நோய் குறையவில்லை. அப்பால் திருவாவடுதுறைக்கே வந்துவிடும்படி சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்ப அவர் அங்ஙனமே வந்து சேர்ந்தார். அங்கும் உசிதமான அளவில் சிகித்ஸை நடைபெற்றுவந்தது. மடத்திற்கு வருபவர்கள், பிள்ளையவர்களைத் தவறாமல் வந்து பார்த்து அவரது அசௌக்கியத்தை அறிந்து வருந்தினார்கள்.

ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குத் தம்முடைய குமாரர் வேண்டுகோளுக்கு இசைந்து ஆசிரியர் மாயூரம் சென்றார். செல்லும்போது அவருடன் சில மாணாக்கர்கள் போனார்கள். ஆசிரியருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் தீபாவளியில் அணிந்துகொள்ளும்படி புதிய வஸ்திரங்களைச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பினார்.

தீபாவளிக் குறை

நான் திருவாவடுதுறையிலே தங்கியிருந்தேன். என் சிறியதந்தையாரோடு தீபாவளி ஸ்நானம் செய்தேன். மடத்தில் உள்ள-

என்—25