பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

என் சரித்திரம்

வர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆதீனகர்த்தர் தீபாவளி ஆடைகள் வழங்கினார். என்ன காரணத்தாலோ எனக்குக் கிடைக்கவில்லை. துலாமாதம் ஆனவுடன் ஆசிரியரை அழைத்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் என்னை மாயூரத்திற்கு அனுப்பினார். நான் போய்ப் பிள்ளையவர்களைக் கண்டதும், அவர் முதலில் என்னை, “தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேஷ்டி கிடைக்கவில்லையாமே?” என்று கேட்டார். அந்த விஷயத்தை அவர் எப்படியோ தெரிந்துகொண்டிருந்தார். அதனால் எனக்கு விசேஷ வருத்தம் ஒன்றும் இராவிட்டாலும் அவருக்கு மாத்திரம் அது பற்றிய உறுத்தல் மனத்தில் இருந்தே வந்தது. “மடத்தில் படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் வஸ்திரம் வழங்கும்போது உம்மை மட்டும் மறப்பதற்கு நியாயம் இல்லையே! உம்மிடம் ஸந்நிதானத்திற்கு எவ்வளவோ பிரியம் இருக்கிறதே. கவனிக்க வேண்டாமா?” என்று அவர் சொன்னார்.

“பெருங்கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; அல்லது கொடுத்ததாக எண்ணி இருக்கலாம். இதற்கு வேறுவிதமான காரணம் இராது” என்று நான் சமாதானம் சொன்னேன்.

“சமாதானம் வேண்டாம். உண்மையான அன்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி நேருவதில்லை. அப்படி நேரிடும்போது அதை வெளியிடாவிட்டால் அன்பு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளுவதில் பயன் ஒன்றும் இல்லை. பணக்காரர்களுக்கு அலக்ஷியமாகப்படும் ஒரு சிறுவிஷயம் உண்மை அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு மிக்கமனக்குறையை உண்டாக்கிவிடும்” என்றார்.

ஆசிரியருக்கு அவ்விஷயத்தில் எவ்வளவு வருத்தம் இருந்ததென்பதை அவர் வார்த்தைகள் புலப்படுத்தின. அதற்கு மூலகாரணம் என்பால் அவருக்கு இயல்பாக உள்ள பேரன்பே. அச்சமயத்தில் நான் சொல்லும் சமாதானமெல்லாம் அவருடைய சினத்தை அதிகமாக்குமென்று உணர்ந்து பேசாமல் இருந்துவிட்டேன்.

மற்றொரு தீபாவளி

ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. அருகில் இருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் பணத்தை அளித்துக் கடைக்குச் சென்று ஒரு புதிய பத்தாறு வஸ்திரம் வாங்கிவரச் செய்து தாமே அதற்கு மஞ்சள் தடவி என் கையிலே கொடுத்து, “இதைக் கட்டிக்கொள்ளும்” என்று அன்புடன் கூறினார். நான் அவ்வாறே அதைத்