பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

என் சரித்திரம்

புஸ்தகங்களைக் கைக்கொண்டு முகமலர்ச்சியோடு ஆசிரியரை அணுகி அவற்றை அவரிடம் அளித்தேன்.

“என்ன புஸ்தகங்கள்?”

“கம்பராமாயணம். அவ்விடத்துக் கையால் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விலைக்கு வாங்கினேன்.”

“விலை என்ன?”

“ஏழு ரூபாய்.”

“பணம் ஏது?”

நான் திருவாவடுதுறைக்கு நடந்து சென்று பணம் வாங்கிவந்ததைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன், “அடடா! இதற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்னிடந்தான் புஸ்தகங்கள் இருக்கின்றனவே! அவற்றை எடுத்துக்கொள்ளலாமே? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? சரி, வாங்கியாய்விட்டது. நன்றாகப் படித்துப் புகழடைய வேண்டும்” என்று சொல்லி அவற்றை என் கையில் அளித்தார்.

அவற்றைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். சில பாடல்களைப் பாடமும் கேட்டேன். எப்பொழுதும் போன்ற நிலையில் ஆசிரியர் இருந்திருப்பின் அப்போது இரண்டு காண்டங்களை நான் பாடம் கேட்டிருப்பேன். அவர் தளர்ச்சியை அறிந்து நான் வருந்தினேன். என் உள்ளத்துள்ளே ஒருவகையான பயம் குமுறிக்கொண்டே இருந்தது.

சில தினங்களுக்குப் பின் மேனாப்பல்லக்கில் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்தார். அவருடன் இருந்த மற்ற மாணாக்கர்களும் நானும் அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்தோம்.

அத்தியாயம்—63

‘சிவலோகம் திறந்தது’

யுவ வருஷம் கார்த்திகை மாத ஆரம்பத்தில் (நவம்பர் 1875) என் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பாடம் நடைபெற்றது. அவருடைய அசௌக்கியத்தால் ஒரு நாளைக்கு முப்பது பாடல்களே