பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவலோகம் திறந்தது

389

பாடங் கேட்க இயன்றது. தக்க வைத்தியர்கள் கவனித்து வந்தனர். சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதேயன்றி நோயைப் போக்குவதற்கு உபயோகப்படவில்லை. காலபலம் கை கூடவில்லை. குமாரசாமித் தம்பிரான் அவர் செய்யும் பூஜையைத் தாமே செய்து பிரசாதம் அளித்து வந்தார்.

ஆசிரியரது உடல் தளர்ந்தாலும் அவருடைய குணச்சிறப்பு வேறுபடவில்லை. அத்தளர்ச்சியில் அவரது அறிவும் அன்பும் மரியாதையும் பெருந்தன்மையும் சிறப்பாகப் புலப்பட்டன.

நோயின் கடுமை

அப்பாழும் நோய் ஆசிரியர் உடம்பில் உள்ள பலத்தை வரவரக் குறைத்துவந்தது; தளர்ச்சியையும் அதிகப்படுத்தியது. பாடஞ் சொல்வது நின்றது. படுத்த படுக்கையாகவே இருக்கத் தொடங்கினார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை இடைவிடாது உடனிருந்து சவேரிநாத பிள்ளை செய்துவந்தார். நானும் என்னால் இயன்றவற்றைச் செய்துவந்தேன்.

சிறியதாயார் செய்த உதவி

என் சிறியதாயார் மிக நன்றாகச் சமையல் செய்வார். அவர் செய்தளிக்கும் உணவுவகைகளின் ருசிகண்ட நான் ஆசிரியருக்கு விருப்பமான வியஞ்சனங்களைச் செய்வித்துக்கொண்டு சென்று அவருக்கு அளிப்பேன். அவரோடு பழகியதனால் அவருக்கு இன்ன இன்ன வியஞ்சனங்களில் பிரியம் உள்ளதென்பதை நான் அறிந்திருந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்கி என் சிறியதாயார் நான் வேண்டியவற்றை அன்புடன் செய்துதருவார். ஆசிரியர் அவற்றை உண்டு மிக்க திருப்தியை அடைவார். அவர் உண்டு மகிழ்வதை அறிந்து நானும் ஆறுதல் பெறுவேன்.

ஆசிரியர் பெரிய பிரயாணத்திற்கு சித்தமாகிறாரென்ற குறிப்பு யாவருக்கும் தெரிந்துவிட்டது. அவருடைய குமாரரும் மனைவியாரும் மாயூரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்தனர்.

தாய் தந்தையார் வரவு

அக்காலத்தில் என் தாய், தந்தையார் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள வேப்பூரில் இருந்து வந்தனர். உடையார்பாளையம்