பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவலோகம் திறந்தது

391

துன்புறுத்தும். “இத்தகைய பொன்மொழிகளைக் கேட்க முடியாமற் போகும் காலம் சமீபித்துவிட்டதே.” என்ற எண்ணத்தை எவ்வளவு முயன்றும் மாற்ற முடியவில்லை.

‘நுந்து கன்று’

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும் பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக் காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விஷயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்துவந்தேன். இலக்கியச் சுவையோடு, சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை உருகச்செய்யும் பத்திச்சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டுவரும்போது இடையே கண்ணீர்விடுவார். அந்தத் தெய்விகநூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமைபெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில் இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”