பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

என் சரித்திரம்

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

“தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டுகொண்டவண்ணம் தம்மையும் ஆண்டுகொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர் உள்ளத்தே எழுந்ததுபோலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவபெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்துகொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது. அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

தேசிகர் விசாரித்தல்

திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் குருபூஜை தை மாதத்தில் வந்தது. ஆலயத்தில் உத்ஸவமும் ஆரம்பமாயிற்று. மடத்திலும் ஆலயத்திலும் சேர்ந்தாற்போல் ஒரே காலத்தில் உத்ஸவங்கள் நடந்தன. வழக்கம்போல வெளியூர்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். தம்பிரான்களும் வித்துவான்களும் பிரபுக்களும் கூடியிருந்தனர். வந்தவர்களிற் பெரும்பாலோர் பிள்ளையவர்கள் நிலையை அறிந்து சிந்தைகலங்கித் தியங்கினர். எல்லோரும் அவருடைய குணநலங்களை நினைந்து உருகினர். “இனி இவருக்குப் பின் இவரைப்போல் யாரைப் பார்க்கப் போகிறோம்?” என்ற கருத்தே எல்லோருக்கும் உண்டாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் குருபூஜை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்கு அமைதி இல்லை. அடிக்கடி பிள்ளையவர்களது தேக நிலையை விசாரித்துக்கொண்டே இருந்தார். “இப்பொழுது எப்படி இருக்கிறது? ஏதாவது ஆகாரம் சென்றதா? ஞாபகம் இருக்கிறதா? பேசுகிறார்களா? பேசினால் தெரிந்துகொள்ளுகிறார்களா?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து