பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசிகர் சொன்ன பாடங்கள்

405

அகமும் புறமும்

எழுந்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கண நூல்களைத்தான் பாடம் கேட்போம். அகப்பொருள் இலக்கணத்தைக் கேட்கவில்லை. திருச்சிற்றம்பலக் கோவையாரை உரையுடன் கேட்டபோது அவ்விலக்கியத்திலிருந்தே இலக்கணத்தை அறிந்துகொண்டோமே யன்றித் தனியே அகப்பொருள் இலக்கண நூலைப் பாடம் கேட்கவில்லை. அக்காலத்தில் அவ்விலக்கணத்தைத் தனியே படிப்பார் மிகக் குறைவு. பொருளிலக்கணத்தின் மற்றொரு பிரிவாகிய புறப்பொருளைப்பற்றிய ஆராய்ச்சியே இல்லை. அகப்பொருளிலக்கணத்தை ஒருவரும் படியாவிடினும் அகப் பொருளிலக்கியங்களைப் படித்தார்கள். புறப்பொருள் விஷயத்திலோ இலக்கியமும் வழக்கில் இல்லை; இலக்கணத்தைத் தேடுவாரும் இல்லை.

யாப்பருங்கலக்காரிகை கேட்டபோது செய்யுள் வகைகளுக்கு உதாரணமாக அந்நூலில் அமைந்திருக்கும் சில பாடல்களுக்குத் தக்கவாறு பொருள் விளங்கவில்லை. ஜைன சமய சம்பந்தமான செய்திகள் அவற்றில் வருகின்றன. நான் முன்பு விருத்தாசல ரெட்டியாரிடம் அதனைக் கேட்ட கால முதலே அச்சந்தேகங்கள் விளங்காமலிருந்தன. தேசிகர், “காரிகையிலுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாக ஸ்ரீ குமரகுருபரர் சிதம்பரச் செய்யுட்கோவை என்ற பிரபந்தம் ஒன்றை இயற்றியிருக்கிறார். சைவ சம்பந்தமான நூலாதலின் நன்றாக விளங்கும். செய்யுளிலக்கணத்தைத் தெரிந்து கொள்ள அந்த நூல் மிக்க உபகாரமாக இருக்கும்” என்று சொல்லி எங்களுக்கு அதைப் பாடஞ் சொன்னார்.

பரிமேலழகர்

திருக்குறளைப் பரிமேலழகருரையுடன் பிறகு பாடம் கேட்டேன். இலக்கண நூல்களுக்கு உரை செய்வதில் சேனாவரையர் எப்படி இணையற்றவரோ அப்படியே இலக்கிய நூல்களுக்கு உரை எழுதுவதில் பரிமேலழகர் இணையற்றவரென்பது தேசிகர் கருத்து. “இந்த இடத்தில் ஒரு விசேஷமும் இராதென்று நாம் ஒரு குறளைப் பார்த்து நினைப்போம். அங்கே பரிமேலழகர் ஏதேனும் ஒரு விசேஷத்தை எடுத்துக் காட்டுவார். பதசாரங்களை எழுதுவதிலும் சுருக்கமாக விஷயங்களைத் தெரிவித்தலிலும் அவருக்கு மிஞ்சியவர்கள் இல்லை” என்று அடிக்கடி பாராட்டுவார். பல நுணுக்கமான விஷயங்களைக் குறட்பாடம் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.