பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

என் சரித்திரம்

மடத்து நிர்வாக சம்பந்தமாக ஏதேனும் கவனிக்க வேண்டுமாயினும், ஆங்கிலத்தில் விண்ணப்பம் முதலியன எழுத வேண்டுமாயினும் சுப்பிரமணிய தேசிகர் வேதநாயகம் பிள்ளைக்கு அதனைச் சொல்லியனுப்புவார். வக்கீல்கள் அதிகமாக மடத்திற்கு வந்து பழகும் காலமன்று அது. மிகவும் சுலபமாக விவகாரங்களைத் தீர்த்துக்கொள்ளும் வழக்கம் சுப்பிரமணிய தேசிகரிடம் அமைந்திருந்தது.

என்பால் அன்பு

இவ்வாறு வேதநாயகம் பிள்ளையிடம் ஏதேனும் காரியம் இருக்குமானால் பெரும்பாலும் தேசிகர் என்னையே அனுப்புவார். நான் மாயூரஞ் சென்று அவர் வீட்டுக்குப்போய் அவரோடு பேசியிருந்து, சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வருவேன். இங்ஙனம் போகும் சமயங்களிலெல்லாம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய புதிய பாடல்களை அவர் தம்பி மூலமாகப் பெற்றுப் படித்தும் படித்துக் காட்டியும் இன்புறுவேன். தமிழ் நூல் சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் சம்பாஷிப்போம். வேதநாயகம் பிள்ளை அதிகமாகப் பேசமாட்டார். பேசும் வார்த்தைகள் அர்த்த புஷ்டியுள்ளனவாக இருக்கும். உத்தியோகத்திலே இருந்து சிறப்புற்றவராதலின் ஒருவருடைய தாக்ஷிண்யம் வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலையில் அவர் இல்லை; அதனால் அவர் பலரோடு பழகுவதில்லை.

அத்தகையவருடைய பழக்கம் மடத்தின் சம்பந்தத்தால் எனக்கு உண்டாயிற்று. முதலிற் பழகும்போது உத்தியோகஸ்தராகிய அவரிடம் எங்ஙனம் பழகுவது என்ற அச்சம் இருந்தாலும் நாளடைவில் அச்சம் நீங்கியது; அவர் என்னிடம் மிக்க அன்போடு பழகினார். அவருடைய இறுதிக் காலம் வரையில் அப்பழக்கம் விட்டுப் போகாமல் விருத்தி அடைந்தது.

அத்தியாயம்—67

சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

சுப்பிரமணிய தேசிகரது அன்பு வர வர விருத்தியானதை நான் பல வகையிலும் உணர்ந்தேன். கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களை ஏதேனும் முக்கியமான விஷயமாகப் பார்த்துப் பேசி வர வேண்டுமானால் தேசிகர் என்னை அனுப்புவார்.